அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் எனவும், எனவே குறைவான தீங்கு விளைவிக்கக்கூடியவருக்கு வாக்களிக்க வேண்டும் என போப்பாண்டவர்ர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற நேரடி விவாதத்தில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த சூழலில், அமெரிக்கா அதிபர் வேட்பாளர்கள் குறித்து பேசிய போப்பாண்டவர், டிரம்ப் மற்றும் கமலா இருவருமே மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள். ஒருவர் புலம்பெயர் மக்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பவர். இன்னொருவர் கருக்கலைப்பை ஆதரிப்பவர். இருவரின் கருத்துக்களும் தீங்கு விளைவிக்கக்கூடியவை, என்றாலும் குறைவான தீங்கிழைப்பவரை தேர்வு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
நீங்கள் உங்களது மனசாட்சியின் அடிப்படையில் யார் குறைவாக தீங்கு விளைவிக்கிறார்கள் என சிந்தித்து, அவருக்கே வாக்களிக்க வேண்டும். மேலும் அமெரிக்க கத்தோலிக்கர்கள் தேர்தலில் வாக்களிக்க தவறாதீர்கள். வாக்களிக்காமல் இருப்பது நல்லதல்ல. எனவே உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்,” என போப்பாண்டவர் கூறினார்.