இனிமேல் எங்கள் இணையதளத்திற்கு வரவேண்டாம்.. உலகின் வினோத வெப்சைட்..!

By Bala Siva

Published:

.பொதுவாக ஒரு இணையதளத்திற்கு பயனர்கள் வந்தால் மீண்டும் அதே இணையதளத்திற்கு வரவழைக்க இணையதளம் தீவிர முயற்சி செய்யும் என்பது தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் ஒரு வினோத இணையதளம் எங்கள் இணையதளத்திற்கு நீங்கள் ஒரு முறை வந்து விட்டீர்கள், இனிமேல் எங்கள் இணையதளத்திற்கு வரவேண்டாம் என்று சொல்வது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இணையதளங்களை உருவாக்குவதில் முக்கிய நோக்கங்களில் ஒன்று, அதிக பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களை தொடர்ந்து வரவழைக்க வேண்டும் என்பது தான். பெரும்பாலான இணையதளங்கள் பார்வையாளர்கள் மீண்டும் வரும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ‘ஒன்லி விசிட் ஒன்ஸ்’ (onlyvisitonce.com) என்ற இணையதளம், இதற்கு நேர்மாறாக, பயனர்கள் ஒரே முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் நுழைந்தவுடன், “வணக்கம் பயனரே, நீங்கள் ஒரு அறிவுரையை எழுதவோ அல்லது வாசிக்கவோ செய்யலாம்” என்ற செய்தி திரையில் தோன்றும். நீங்கள் விரும்பினால் ஒரு அறிவுரையைப் பதிவுசெய்யலாம் அல்லது மற்றவர்களின் அறிவுரையை வாசித்துவிட்டு தளத்தைவிட்டு வெளியேறலாம். ஆனால், மீண்டும் தளத்தைத் திறக்க முயன்றால், “நீங்கள் ஏற்கெனவே இந்த தளத்தை பார்த்து விட்டீர்கள். உங்கள் பயணம் முன்னோக்கி இருக்கட்டும், திரும்பி வர வேண்டாம்” எனும் செய்தியுடன் தளம் நிறுத்தப்பட்டுவிடும்.

இந்த தளம் பயனர்களின் ‘ஐபி’ முகவரியைத் திரட்டுவதன் மூலம், ஒரே ஒரு முறைதான் தளத்தை அணுகியுள்ளீர்களா என்பதை கண்காணிக்கும். இதற்கான தனியுரிமை குறிப்புகளும் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. இந்த வித்தியாசமான தளத்தை உருவாக்கியவர் நோவா பாரன் என்பவர். அவரது நோக்கம், இணைய பயனர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தி, வாழ்க்கையில் முன்னோக்கி செல்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும். முடிந்தால் இந்த இணையதளத்திற்கு ஒருமுறை சென்று அனுபவம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்..