Video : அப்படியே பும்ரா மாதிரி.. 9 வயசு பையன் கிரிக்கெட் பயிற்சியில் செஞ்ச விஷயம்.. வீடியோ..

By Ajith V

Published:

முன்பெல்லாம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு அணியில் இருந்தும் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு முதல் மூன்று பேர் இருப்பார்கள். அப்போதெல்லாம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என எந்த போட்டிகள் நடந்தாலும் பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு புகழ் பெற்று பேசப்படுகிறார்களோ அதற்கு இணையாக பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகளும் ரசிகர்களை அதிக அளவில் அச்சுறுத்தி வரும்.

இதனால் ஒரு போட்டி என்பது பந்து வீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கான யுத்தமாக கிரிக்கெட்டில் நடந்து வந்த நிலையில் தான் சமீபகாலமாக அதன் தன்மை குறைந்து வருவதாக தெரிகிறது. டி20 உள்ளிட்ட குறைந்த ஓவர் போட்டிகளின் அதிகரிப்பால் தற்போது பந்து வீச்சாளர்களைத் தாண்டி பேட்ஸ்மேன்களுக்கே அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதற்கு காரணம் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதகமான பல விதிகள் தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பந்து வீச்சாளர்கள் இன்னும் அதிகமாக மெனக்கெட்டு செயல்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட் என வரும்போது ரன் அடிப்பது மட்டுமே மிகப்பெரிய குறிக்கோளாக பார்க்கப்படுவதால் பந்து வீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களுக்கான வேலையே அதிகமாக இருக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி தற்போதும் சில பந்து வீச்சாளர்கள் அதிகம் பேர் ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்து வருகின்றனர்.

அதில் மிக முக்கியமான ஒருவர் தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. நீண்ட நாட்களாக இந்திய அணிக்கு சரியான ஒரு வேகப்பந்து வீச்சாளர் அமையாமல் இருந்து வந்த நிலையில் தான் கடந்த பல ஆண்டுகளாக பும்ராவின் தாக்கம் சர்வதேச அரங்கிலும் அதிகம் பிரதிபலித்து வருகிறது.

பழைய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் பும்ராவின் பந்துவீச்சு, அதில் உள்ள வேகம், டெக்னிக் உள்ளிட்ட விஷயங்களை வியப்புடன் பாராட்டி வரும் சூழலில் இந்திய அணிக்காக தொடர்ந்து பல தொடர்களில் முக்கிய பங்காற்றி வருகிறார். அதே வேளையில் அவ்வபோது காயத்தால் அவதிப்படுவதால் மிக கவனமாக பும்ராவையும் இந்திய அணி பயன்படுத்தி வருகிறது.

அத்துடன் பும்ரா பந்து வீச்சு என வரும்போது அவர் ஸ்டெப்பும் மிக கடினமான ஒன்றுதான். கொஞ்சம் பாதுகாப்பாக இல்லை என்றாலும் நிச்சயம் காயத்தில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் பும்ராவின் கடினமான பந்துவீச்சு ஸ்டைலை அப்படியே ஒன்பது வயது சிறுவன் செய்த்து தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில் 9 வயது சிறுவன் ஒருவன் அப்படியே பும்ரா போல ஓடிவந்து அந்த வயதுக்கு ஏற்ற வேகத்தில் பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசுகிறார். பும்ரா பலருக்கும் இன்ஸ்பிரேஷ்னாக இருந்து வருகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்த தலைமுறை சிறுவர்களுக்கும் அவரது பந்துவீச்சு போய் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.