விளையாட்டு

தோனி அடுத்த வருஷம் ஐபிஎல் ஆடணும்னு.. ரசிகர் செஞ்ச விஷயம்.. முரட்டு கன்னியா இருப்பாரு போலயே.. வைரல் வீடியோ

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாட வேண்டும் என அவர் விரும்புகிறாரோ இல்லையோ அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்னும் ஒரு சில சீசன்களில் அவரை பார்க்க வேண்டும் என மரண வெயிட்டிங்கிலேயே இருக்கின்றனர். இதற்கு காரணம் கடந்த 20 ஆண்டுகளாக தோனி கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கங்கள் தான்.

சர்வதேச அரங்கில் 2020 ஆம் ஆண்டு வரை ஆடி வந்த தோனி, அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடி வருகிறார். 40 வயது ஆனாலே கிரிக்கெட் போட்டிகள் ஆடுவதை பெரும்பாலான வீரர்கள் நிறுத்திக் கொள்ளும் நிலையில் தனது பிட்னஸ் காரணமாக 43 வயதிலும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் தோனி, நிச்சயம் அவரது ஆட்டத்திற்கு இன்னும் ஒரு சில ஐபிஎல் தொடர்களே ஆடலாம்.

ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளதால் இளம் வீர்ர்களுக்கு தான் சிஎஸ்கே அணி முன்னுரிமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் சிஎஸ்கே அணியின் அடையாளமாக தோனி இருப்பதால் நிச்சயம் அடுத்த சீசனில் எப்படியாவது அவரை தக்க வைத்துக்கொள்ள தான் சிஎஸ்கே அணியும் முயற்சிக்கலாம்.

தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவது என்பது நிச்சயம் பிசிசிஐ எடுக்கும் முடிவுகளை பொறுத்து தான் அமையும் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் ஆடினாலும் 2025 சீசனுடன் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் மெகா ஏலம் குறித்த தகவல்கள் வெளியான நாள் முதலேயே தோனி ஆடுவாரா மாட்டாரா என்பது பற்றி தான் பெரிய விவாதமும் தற்போது சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் தான் தோனி தொடர்ந்து அடுத்த ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்பதற்காக ரசிகர் ஒருவர் செய்த செயல் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டிருந்த நிலையில் பல இடங்களில் விநாயகர் சிலைகளையும் வேண்டுதலுக்காக வைத்திருந்தனர். அந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் ரசிகர் ஒருவர் தாள் ஒன்றில், ‘தோனி 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும்’ என எழுதி அதனை விநாயகரின் பாதத்தின் அருகே வைக்கிறார்.

ரசிகர்கள் பலரும் தோனி ஆட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த ரசிகரோ இன்னொரு படி மேலே போய் நேரடியாக ஆண்டவனுக்கே வேண்டுதல் வைத்துள்ளது தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Ajith V
Ajith V

நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.