எல்லாவற்றையும் விட மகாளய அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? அந்த 15 நாள்களை மிஸ் பண்ணிடாதீங்க…!

By Sankar Velu

Published:

ஒரு ஆண்டில் 12 அமாவாசை திதிகள் வரும். இவற்றில் தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை என 3 முக்கிய திதிகள் வருகிறது. வருடம் முழுவதும் அமாவாசை திதியைக் கடைபிடிக்க முடியாதவர்கள் இந்த 3 அமாவாசை திதிகளைக் கடைபிடித்தாலே வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்த பலனைப் பெற்றுவிடலாம்.

நம் முன்னோர்கள் பித்ருலோகம் எனப்படும் தென் குலத்தில் இருப்பார்கள். அங்கிருந்து நாம் ஒவ்வொரு அமாவாசைக்கும் அளிக்கும் தர்ப்பணத்தில் எள், நீரினை ஏற்றுத் திரும்பிக் கொள்வார்கள் என்பது நம்பிக்கை.

நம் முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பித்ரு லோகத்தில் இருந்து கிளம்பி பூமியை நோக்கி வருவார்களாம். அப்படிப் புறப்பட்டவர்கள் சரியாக ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியை அடுத்த பிரதமை திதி நாளில் பூமிக்கு வந்து விடுவார்கள். அங்கு 15 நாள்கள் தங்கி இருக்கிறார்கள்.

அது மகாளய பட்ச காலம் எனப்படுகிறது. அந்த 15 நாள்களும் நாம் அளிக்கும் எள், நீரைப் பெற்றுக் கொண்டு திருப்தியாக மகாளய அமாவாசை முடிந்ததும் பித்ரு லோகத்திற்குச் செல்கிறார்கள்.

அவர்கள் நம்மோடு இருக்கும் இந்த 15 நாள்களும் நாம் அவர்களை வழிபடுவது கண்டு மகிழ்ந்து நமக்கு நல்லாசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. அதனால் இந்த மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தந்து அவர்களை வழிபட வேண்டும்.

MA
MA

அது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால் மகாளய அமாவசை அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். அது ஆண்டு முழுவதும் வழிபட்டதற்குரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை. முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள் சிரார்த்தங்கள் மூலம் கூடுதல் சக்தியும், ஆத்ம பலனும் கிடைக்கும். அந்த சக்தியைப் பெறும் பித்ருக்கள் அதை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பது வழக்கம் என்பது ஐதீகம்.

நம் முன்னோர்களுக்கு செய்யும் இந்தத் தர்ப்பணம் சிரார்த்தங்கள் மூலம் நம் முன்னோர்களை மட்டுமின்றி மகாவிஷ்ணுவையும் சென்றடைகிறது. அதனால் தான் மகாளய அமாவாசை மற்ற எல்லாவற்றையும் விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி (2.10.2024) புதன்கிழமை மகாளய அமாவாசை வருகிறது. 1.10.2024 அன்று இரவு 10.35 மணிக்குத் தொடங்கி 3.10.2024 அன்று அதிகாலை 12.34 மணிக்கு முடிவடைகிறது.