தனது வீட்டு வாசலில் மூதாட்டி ஒருவர், பெரிய கல் ஒன்றை பயன்படுத்தி வந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு அது பற்றிய மதிப்பு தெரிய வந்ததும் அவருக்கு தலையே சுற்றி போயுள்ளது. ஐரோப்பாவின் ரோமானியா நாட்டின் தென் கிழக்கு பகுதியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கே கடந்த 1991 ஆம் ஆண்டு, வயதான மூதாட்டி கருப்பு நிறத்தில் கல் ஒன்றை ஆற்றின் அருகே கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அது என்ன என்பதே தெரியாமல் இருந்த மூதாட்டி, வீட்டின் கதவு திறந்து வைப்பதற்கான கல்லாகவும் இதனை அவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவரும் கடந்த 1991 ஆம் ஆண்டு மறைந்து போக, அந்த கல்லை அவரது உறவினர் ஒருவர் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கல்லின் மீது நிறைய சந்தேகங்களும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அது ஒரு சாதாரண பாறை துண்டு இல்லை என்றும் அதில் கொஞ்சம் பளபளப்பாக இருந்ததால் வேறு ஏதேனும் விலை மதிப்புள்ள பொருளாக கூட இருக்கலாம் என்றும் அவர் நினைத்ததுடன் மட்டுமில்லாமல் ரோமானியன் அரசுக்கு அந்த கல்லையும் விற்றுள்ளனர்.
அவர்கள் அதனை போலந்து நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைத்திருந்தனர். மேலும் இதனை தேசிய புதையல் என்றும் அவர்கள் அங்கீகரித்த நிலையில் பின்னர் தான் அதன் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தெரியவந்துள்ளது.
Amber Nugget எனப்படும் அரிய கல்லான இது ஏறக்குறைய 38.5 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. சுமார் மூன்றரை கிலோ எடையுள்ள இதன் மதிப்பு ஏறக்குறைய இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், அதனை இத்தனை ஆண்டுகள் அந்த மூதாட்டி ஒரு கதவை திறந்து வைப்பதற்கான கல்லாக பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் பலருக்கும் ஆச்சரியம் தான். இந்த ஆம்பர் நக்கட் என்னும் பொக்கிஷம் நிறைந்த கல் 160 வகைகளில் இந்த பூமியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கதையில் மற்றொரு சுவாரஸ்யமாக அந்த மூதாட்டி இருந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவர்கள், வேறு நகைகளை எடுத்துச் சென்ற நிலையில் அந்த கல்லை விட்டுச் சென்றதும் தற்போது பலர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவ் மாகாண அருங்காட்சியத்தில் இந்த கல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மூதாட்டி பயன்படுத்தி வந்தது வேடிக்கையான வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.