இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும், பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மணிமண்டபத்தினையும், காந்தி மண்டபம், சூரிய உதயம், அஸ்தமனம் உள்ளிட்டவற்றைக் கண்டுகளிக்க உலகம் முழுவதிலுமிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது விவேகானந்தர் பாறைக்குச் செல்ல வேண்டுமெனில் பூம்புகார் கடல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படகுகள் விவேகானந்தர் பாறையில் இறக்கிவிடப்பட்டு பின் அங்கிருந்து அடுத்த பயணிகளை திருவள்ளுவர் சிலைக்கு ஏற்றி சென்று மீண்டும் கரை திரும்புகின்றன.
தற்போது விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்தக் கண்ணாடிப் பாலம் 97மீ, 4 மீ அகலம் கொண்டதாகக் கட்டப்படுகிறது.
கடல் பரப்பிலிருந்து தலா 27 அடி உயரத்தில் 6 ராட்சத இரும்புத் தூண்களைக் கொண்டு இப்பாலம் நிறுவப்படுகிறது. கடல் காற்று மற்றும் உப்பு நீரால் அரிக்காத வண்ணம் நவீன தொழில்நுட்பம் கொண்டு இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது.
இதன் வழியே திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்கையில் கீழே அலைகளை ரசிக்கலாம். 222 டன் எடை கொண்ட இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணியை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி கடலில் அமைக்கப்படும் இந்தக் கடல் பாலப் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் எனவும், பாலத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.