தற்போதெல்லாம் ஒரு நடிகருக்கு இணையாக இன்னொரு நடிகர் புதிய திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டாலே அவர்கள் இருவருக்கிடையே போட்டி இருப்பதாக ரசிகர்களே ஒரு தகவலை கிளப்பி விடுவார்கள். அந்த இரண்டு நடிகர்கள் நட்பாக பழகி வந்தாலும் கூட அவர்களுக்காக உருவாகும் ரசிகர்கள் ஏதோ இரண்டு பேரும் எதிரிகளைப் போல நினைத்து மோதலில் ஈடுபடுவதுடன் மட்டுமில்லாமல் அவர்களின் திரைப்படங்கள் வரும்போது ஒரு பக்கம் ஆதரவாகவும் இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் காண்பிப்பார்கள்.
ரஜினி – கமல், விஜய் – அஜித், விக்ரம் – சூர்யா, தனுஷ் – சிம்பு என தொடங்கி விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் வரையிலும் இந்த போட்டி நிலவி வருகிறது. வருங்காலத்திலும் இதுபோன்று இரண்டு நடிகர்களை மையப்படுத்தி ரசிகர்களின் மோதல் இருந்து வரும் என்பது உறுதியாக தெரியும் சூழலில் எம்ஜிஆர், சிவாஜி கணேசனும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நட்பாக இருந்ததுடன் மட்டுமில்லாமல் இருவரின் ரசிகர்களே மாறி மாறி திரைப்படங்களையும் பார்த்து கண்டுகளித்து வந்தனர். ஒரு பக்கம் கமர்சியலாக மக்களின் குரலாக திரையில் ஒலிக்கும் எம்ஜிஆரும், இன்னொரு பக்கம் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி மிரட்டும் சிவாஜியையும் ரசிகர்கள் அதிகம் கொண்டாடி தீர்த்த நிலையில் இவர்களது காலம் தமிழ் சினிமாவின் பொற்காலமாகவும் பார்க்கப்படுகிறது.
எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த பின்னர் அரசியலில் நுழைந்த நிலையில் சிவாஜி கணேசன் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து விடுதலை, படிக்காதவன், படையப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி, கமல்ஹாசனுடன் தேவர் மகன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதே போல விஜய்யுடன் ஒன்ஸ்மோர் திரைப்படத்திலும் நடித்துள்ள சிவாஜி கணேசன் மற்ற சில இளம் நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அப்படி இருக்கையில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவு காரணமாக தனது 72 ஆவது வயதில் காலமானார் சிவாஜி கணேசன்.
ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் சேர்ந்து சிவாஜிக்கு பிரியா விடை அளித்திருந்தது. இதனிடையே சிவாஜி மறைவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக தன்னை சந்தித்து பேசியது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சிவாஜியின் மகள்தான் சாந்தி. இவரது மகளும், சிவாஜியின் பேத்தியை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சுதாகரன் ஒரு வழக்கு விஷயமாக கைது செய்யப்பட அதிக மன வேதனையிலும் சிவாஜி கணேசன் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் நடந்த சம்பவம் பற்றி பேசும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, “ஒரு நாள் என்னை சிவாஜி வீட்டுக்கு வந்து சாப்பிடும் படி அழைத்திருந்தார். அங்கே நான் சென்றபோது அவர் என்னிடம், ‘ மனது மிக கஷ்டமாக இருக்கிறது. எனது பேத்தியை இப்படி என்னால் பார்க்கவே முடியவில்லை. எனது அண்ணன் (எம்ஜிஆர்) பேரும் புகழோடும் சீக்கிரமாகவே போய்விட்டார்.
நான்தான் அந்த பஸ்ஸை மிஸ் செய்து விட்டேன்’ என்று என்னிடம் வேதனையில் பேசி பின்னர் நானும் கிளம்பி சென்று விட்டேன். அப்படி அவர் பேசிய 15 வது நாள் சிவாஜியின் மரணமும் நடந்தது” என கலைப்புலி எஸ். தாணு கூறியுள்ளார்.