PM Shri scheme | பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்

By Keerthana

Published:

டெல்லி: நாடு முழுவதும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தில், ஏற்கனவே உறுதி அளித்தபடி தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த போகிறது. இதன்படி நாடு முழுவதும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்ற பெயரில் 14 ஆயிரத்து 500 பள்ளிகளை தரம் உயர்த்தப்படும். இதன்மூலம் 18 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள். இந்த பள்ளிகள், புதிய கல்விக்கொள்கைக்கு ஏற்ப முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இந்த திட்டத்தில்
முதல்கட்டமாக, 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6 ஆயிரத்து 448 பள்ளிகளை தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தின் படி நிதி ஒதுக்கீடுதரப்படும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறுகையில், நடப்பு 2024-2025 கல்வி ஆண்டில் பி.எம்.ஸ்ரீ திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக கடந்த மார்ச் 15-ந் தேதி தமிழ்நாடு அரசு உறுதிமொழி அளித்திருந்தது. அந்த உறுதிமொழியை பெற்றுக்கொண்ட பிறகு, மத்திய பள்ளிக்கல்வி துறை, ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதற்கு பதிலாக ஒரு திருத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. அதில், புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய பத்தி நீக்கப்பட்டு இருந்தது.

புதிய கல்விக்கொள்கையுடன் இணைந்த சமக்ர சிக்ஷா திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது. அதுபோல், புதிய கல்விக்கொள்கையின் அனைத்து அம்சங்களையும் தமிழ்நாடு அமல்படுத்துவது நல்லதாகும். பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக்கொள்வது அவசியம். சிறப்பான பள்ளிக்கல்வி சேவையை பெற அரசு பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக பி.எம்.ஸ்ரீ திட்டம் மேம்படுத்தும். எனவே, ஏற்கனவே உறுதி அளித்தபடி பி.எம்.ஸ்ரீ திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்” இவ்வாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.