பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

By Keerthana

Published:

சென்னை: ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் சுயதொழிலுக்காக 200 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: “கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நீக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் கடந்த 2022-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த ஜூன் 21-ந்தேதி சமூக நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்த வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக் கடைகள் போன்றவற்றை அமைத்து சுய தொழில் செய்வதற்காக நலவாரியம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம், 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, சமூக நல ஆணையர், நலவாரியத்தின் மூலம் மானியம் பெறுவதற்கான தகுதியை நிர்ணயித்து அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதை பரிசீலித்த அரசு, இந்தத் திட்டத்திற்கு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த மானியத்தை பெறுவதற்கு ஒருவர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற முடியும். மானியத்திற்கான விண்ணப்பத்துடன், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றவர், ஆதரவற்றவர் மற்றும் பேரிளம்பெண் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று, வருவாய் சான்று, ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.