திட்டனும்னு நினைக்கிறேன்.. திட்ட முடியல.. வாழை படம் குறித்து கிருஷ்ணசாமி அறிக்கை..

By John A

Published:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான வாழை திரைப்படம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசியல், சாதி அடக்குமுறை மீது பலர் தங்களது கருத்துக்களை ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து சாதி அடக்குமுறை சார்ந்த படங்களை மாரி செல்வராஜ் இயக்கி வருவதால் அவர் மீதான பார்வையும் வேறு கோணத்தில் திரும்பியிருக்கிறது. எனினும் தன் பட்ட வலிகளை திரைப்படமாகப் பதிவு செய்து அதை ரசிகர்களுக்குக் காட்ட சிலாகித்துப் போயிருக்கின்றனர் திரைத் துறையினர். பாலா, மிஷ்கின், நெல்சன், விக்னேஷ்சிவன், மணிரத்னம், ராம், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்கள் மாரி செல்வராஜின் படைப்பினை கொண்டாடியிருக்கின்றனர்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வாழை படம் பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில், தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரத்திலும் வசிக்கும் தேவந்திர குல வேளாளர்களே, இன்றும் சிறுநில உடைமையாளர்களாக இருக்கின்றனர்.

செருப்பால அடிங்க.. திரைத்துறையினர் மீதான நடிகைகளின் பாலியல் புகார்களுக்கு விஷால் பளார் பதில்..

எந்த ஒரு சிறு அல்லது நடுத்தர விவசாயியும் தன் நிலத்திலும் பயிர் செய்வார். அண்டை நிலத்திலும் உழவு செய்வார். களை எடுப்பார். நெல்லை அறுப்பார், வாழையும் சுமப்பார். அது அடிமைத்தனம் அல்ல. சுரண்டலின் வெளிப்பாடும் அல்ல. நெல்லையும், வாழையையும் விளைவித்துக் கொடுத்ததுதான் இம்மக்களின் வரலாறு.. சுமந்து கொடுத்தது அல்ல.

தனது இழந்த அடையாளத்தை, அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப் படுத்த முயற்சி செய்யாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சமுதாயத்தை இன்னும் கூலிக்காரர்களாகவே சித்தரித்து சிறுமைப்படுத்துகின்ற போக்கும் அவர்களின் போராட்ட உணர்வுகளையும், குணங்களையும் மழுங்கடித்து, யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ, புதிய களம் அமைத்துக் கொடுக்கக் கூடிய விதம் ஏற்புடையது அல்ல.

வாழை படத்தை பாராட்ட நினைக்கிறேன்.. பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன் திட்டவும் முடியவில்லை.

இன்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் டாக்டர். கிருஷ்ணசாமி.