குடிகாரர்களின் மனநிலையை பாடலில் அப்படியே எடுத்துச் சொன்ன கண்ணதாசன்.. மிரண்டு போன எம்.எஸ்.வி..

By John A

Published:

கவிஞர் கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதானும் பாடல்களை உருவாக்கும் சூழ்நிலையே தனி அழகு தான். இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு, இசை பெரிதா, பாட்டு பெரிதா எனப் போட்டி போட்டு இசை ரசிகர்களுக்கு தேன் சிந்தும் பாடல்களைக் கொடுத்தனர்.

அதிலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசனின் வரிகள் அனைத்தும் வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும் பாடங்களாக விளங்கின. ஒவ்வொன்றையும் அனுபவித்து கவிஞர் தனது பேனாவில் பாடல்களாக வடித்திருப்பார். அப்படி குடிகாரர்களின் மனநிலையை அப்படியே உரித்து வைத்தாற் போல் எழுதிய பாடல் தான்.

நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்..
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்..

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 1972-ல் சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நீதி. இப்படத்தில் இடம்பெற்ற சிவாஜி போதையில் பாடுவது போல் அமைந்த பாடல் தான் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல்.

தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக மாறிய ஆர்யா.. இவ்வளவு டெடிகேஷனா?

இந்தப் பாடலுக்கான டியூனை எம்.எஸ்.வி சொல்லி அவரே இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் என்று பாடியிருக்கிறார். அப்போது கண்ணதாசன் அவருக்குப் பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து இந்தப் பாட்டு ஆரம்ப வரிகள் உன்னுடையது இந்தா 10 ரூபாய் என்று கொடுக்க முற்பட்டிருக்கிறார். எம்.எஸ்-வி. அதனை வாங்கும் நேரத்தில் மீண்டும் தனது பாக்கெட்டில் 10 ரூபாயை வைத்திருக்கிறார் கண்ணதாசன்..

எம்.எஸ்.வி. என்னவென்று கேட்க, எந்தக் குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று கூற மாட்டான். எனவே இன்று என்பதை எடுத்துவிட்டு நாளை என்பதை சேர்த்துக் கொள்வோம். அதன்பின் பாடல் நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் என்று உருவாகியிருக்கிறது. இந்தப் பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருப்பார். எனவே இந்தப் பாடலை திருத்தியது நான்தான் ஆகவே 10 ரூபாய் எனக்குத் தான் என்று எம்.எஸ்.வி-ககு தக் லைஃப் சம்பவம் செய்திருக்கிறார் குறும்புக் கவிஞர்.

கண்ணதாசன் சொல்லியது போலவே எந்தக் குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் எடுக்க மாட்டான். நாளை முதல் என்று தான் சத்தியம் எடுப்பான். எப்படியெல்லாம் கவிஞரின் திறமை இருந்திருக்கிறது என்பதற்கு இந்தப் பாடலும் ஓர் எடுத்துக்காட்டு.