இந்த உலகில் ஒரு தந்தையாக நமது பிள்ளைகளுக்கு செய்யும் தியாகங்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் நாம் விளக்கி விட முடியாது. எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் முடிந்த வரையில் தங்களது பிள்ளைகள் வாழ்வில் உயர என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்பவர்கள் இங்கு ஏராளமாக உள்ளனர்.
இப்படி பல கடின உழைப்பால் தனது பிள்ளைகளையும் மெருகேற்றி வரும் தந்தை அந்தப் பிள்ளைகள் வளர்ந்து பின் ஒரு உயர்ந்த இடத்திற்கு செல்வதை பார்க்கும் போதே பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போகும் அளவுக்கு மாறி விடும். இப்படி இந்த உலகில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் தந்தை என்பவரின் அர்ப்பணிப்பு ஒன்றை பற்றி தான் தற்போது இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
மதுரை மாவட்டத்தில் ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கே கட்டிட பணிகள் கொஞ்சம் மீதமிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இந்த வேலையை முடிப்பதற்காக அதே பள்ளியில் படித்த பீமா என்பவரின் தந்தையும் கட்டிட தொழிலாளியுமான அழகு முருகன் என்பவரை பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த பணிகளை மூன்று தினத்தில் அழகு முருகன் முடித்துள்ள சூழலில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு ஊதியத்தை கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால் அந்த கூலியை பெற்றுக் கொள்ளாத அழகு முருகன் தனது மகன் படித்த பள்ளிக்காக தான் செய்யும் ஒரு சிறிய உதவியாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு காசை வாங்க மறுத்து விட்டாராம்.
அழகு முருகனின் மகன் பீமா இதே பள்ளியில் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பி. ஏ படித்து வருகிறார். தனது மகனின் உயர்கல்வி வளர்ச்சிக்கு உதவிய பள்ளிக்காக தான் ஏதாவது ஒரு உதவியும் செய்ய வேண்டும் என்று நினைத்து வந்ததாகவும் அதனால் இந்த வேலையை கூலி இல்லாமல் செய்து முடித்ததாகவும் மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார் அழகுமுருகன்.
பள்ளி சார்பில் இதைப் பற்றி பேசுகையில், விடுமுறை தினங்களில் கூட அழகு முருகனின் மகன் பீமா மரம், செடிகளை பள்ளி வளாகத்தில் நட்டு வந்ததாகவும் அதன் பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்து அவரது உயர்கல்விக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தனது மகன் படிப்பில் உயரத்த இடத்திற்கு வர வேண்டுமென உழைத்த பள்ளிக்காக தந்தை செய்த மாற்று உதவி தற்போது பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.