பஞ்சாட்சர மந்திரத்துக்குள் மறைந்து இருக்கிற 5 மந்திரஙங்களைப் பற்றிப் பார்ப்போம். பஞ்சாட்சரம் என்பதே மிக உயர்ந்த பலனைத் தரக்கூடியது. சிவபெருமானின் நாமத்தைச் சொல்லச் சொல்ல அது நம்மையும், ஆன்மாவையும் பக்குவப்படுத்தி வேண்டும் என்கின்ற வரங்களைத் தரக்கூடியது இதுதான்.
மாணிக்கவாசக சுவாமிகள் தனது திருவாசகத்தைத் துவங்கும்போது இந்தப் பஞ்சாட்சரத்தை வைத்துத் தான் துவங்குகிறார். நமசிவாயம் வாழ்க… நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்றார்.
பஞ்சாட்சரத்தில் நாம் எப்படி சொல்வது? ‘நமசிவாய’ன்னு சொல்வதா? ‘சிவாயநம’ன்னு சொல்வதா? சிவய நம சிவய சிவன்னு சொல்றதா, சிவசிவன்னு சொல்வதா? இப்படி பலருக்கும் குழப்பங்கள் வருகிறது. அதென்னன்னு பார்ப்போம்.
பஞ்சாட்சரத்தின் உள்ளே 5 மந்திரங்கள் மறைந்துள்ளன. அவை இவை தான். ஸ்தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதிசூட்சும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம்.
ஸ்தூல பஞ்சாட்சரம் என்பது நமசிவய என்ற நாமம். சூட்சும பஞ்சாட்சரம் என்பது சிவய நம என்ற நாமம். அதிசூட்சும பஞ்சாட்சரம் என்பது சிவய சிவ. காரண பஞ்சாட்சரம் என்பது சிவசிவ. மகா காரண பஞ்சாட்சரம் என்பது சி என்ற நாமமும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த அஞ்சுல எதைச் சொன்னா நல்லது? இதுல வரக்கூடிய மந்திரங்கள் மாறி மாறி வந்தாலும் எல்லாமே 5 எழுத்துக்கள் தானே. அவற்றிற்கு என்னென்ன சிறப்புகள்னு பார்ப்போம். ‘சி’ என்றால் சிவம். ‘வ’ என்றால் திருவருள். ‘ய’ என்றால் ஆன்மா. ‘ந’ என்றால் திரோதமலம். ‘ம’ என்றால் ஆணவ மலம்.
ஸ்தூல பஞ்சாட்சரம் என்று சொல்லும் நமசிவாய என்ற மந்திரத்தைச் சொன்னால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும்? இகலோக பலன்கள் கிடைக்கும். இதனால் இப்பிறவிக்குக் கிடைக்கக் கூடிய பல்களை நாம் பெற்று உயர்ந்த வாழ்க்கையை வாழ முடியும்.
அடுத்ததாக சூக்கும பஞ்சாட்சரத்தை சிவாய நமன்னு மனதிற்குள்ளேயே சொல்ல வேண்டும். சத்தமாக சொல்லக்கூடாது. அதனால் தான் சிவாயநம என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இன்மை, மறுமை, ஞான நலன்களுடன் மோட்சம் அடையும் தகுதியையும் பெற்றுத் தரும்.

அதிசூட்சும பஞ்சாட்சரத்தில் சிவயசிவ என்ற நாமம். இதுல ய உயிராகக் கருதப்படுகிறது. சிவ இருபுறமும் இருக்கு. இதனால் சிவமாகவும், சக்தியாகவும் இருந்து நமது ஆன்மாவைக் காக்கக் கூடிய மந்திரம். நமது சிந்தை முழுவதையும் இறைவனின் திருவடியிலேயே அர்ப்பணித்து இறைவனை ஒன்றக்கூடிய நிலை உண்டாகும். நம் மல மாயங்களை நீக்கிப் பேரின்ப பெருவாழ்வைப் பெற்றுத் தரும். இதற்கு மாணிக்க மந்திரம் என்றும் பெயர்.
காரண பஞ்சாட்சரத்தில் சிவசிவ என்ற நாமம் வருகிறது. இதற்கு இறைவனும் நாமும் ஒன்று என்று பொருள். இறைவனின் திருவடியில் நிரந்தரமாகக் கலக்க இந்த நாமம் பயன்படும். அதனுடன் வாசனா மலங்களையும் நீக்கும்.
ஆணவம், கன்மம், மாயை என்பது மும்மலங்கள். நமது மலங்கள் நீங்கினாலும் பெருங்காய டப்பாவில் காயத்தை நீக்கினாலும் வரும் வாசனைப் போல மலங்கள் நீங்கினாலும் அவற்றோட எச்சம் ஒட்டிக் கொண்டே இருக்கும். அதையும் போக்கும் நாமம் தான் இது.
அடுத்ததாக மகா காரண பஞ்சாட்சரம். இதற்கு ஓரெழுத்து மந்திரம். இந்த ஒரு எழுத்தான ‘சி’என்பதை மட்டும் சொன்னால் முன்னால் இருக்கும் 4 மந்திரங்களையும் சொன்ன பலன்களைத் தரக்கூடியது.
பல ஆயிரம் முறை மந்திங்களைச் சொன்னவருக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். பெற்ற திருவடிப் பேற்றை எப்போதும் நம்மிடம் நீங்காமல் இருக்க உதவி செய்யும். இங்கு கொடுக்ப்பட்டுள்ள அட்டவணையும் பஞ்சாட்சரத்திற்குள் இருக்கக்கூடிய மந்திர நாம ஜெபங்கள் தான்.
மேற்கண்ட தகவல்களைப் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



