தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் காமெடி நடிகர்களில் உச்சம் தொட்டவர்கள் நாகேஷ், தங்கவேலு. இதற்கு அடுத்த தலைமுறையில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் யாரும் நிலைக்கவில்லை. ஆனால் தனது கரகர குரலாலும், மேனரிஸத்தாலும் ரசிகர்களை வசீகரித்து காமெடியில் கலக்கியவர் நடிகர் சுருளிராஜன். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த நடிகர் சுருளிராஜன் எம்.ஜி.ஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பழைய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
காமெடியா, குணச்சித்திர வேடமா இவருதான் சரியான ஆள் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் சுருளிராஜன். நாகேஷூக்கு அடுத்து நகைச்சுவை நடிகர் இடம் வெற்றிடமாக இருந்ததை நிரப்பியவர். சில ஆண்டுகளே தமிழ் சினிமாவில் நீடித்தாலும் மாந்தோப்புக் கிளியே ‘கஞ்சன்‘, மீனவன் போன்ற மறக்க முடியாத பல காமெடி கதாபாத்திரங்களை தமிழ்சினிமாவிற்கு அளித்தவர்.
இப்படி மறக்க முடியாத நடிகர்களில் ஒருவரான சுருளிராஜன் தனது 42 வயதிலேயே மரணமடைந்தார். இவரது இளம் வயது மறைவுக்குக் காரணம் இவருக்கு இருந்த குடிப்பழக்கம் என்றே கூறப்படுகிறது. இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூட தனது புத்தகத்தில் கூட சுருளிராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததைப் பதிவு செய்திருப்பார். இந்நிலையில் சுருளிராஜனின் மனைவி பேட்டி ஒன்றில் தனது கணவர் மரணம் பற்றி பேசியிருக்கிறார்.
அதில் “எனது கணவர் சுருளிராஜன் குடிச்சு தான் செத்தார்ன்னு நீங்க பார்த்தீங்களா? எல்லாரும் சொல்றாங்க அவர் குடிச்சுத் தான் செத்தார்ன்னு. இத யார் சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியாது. நான் ஒருத்தர் பெயரைச் சொல்ல விரும்பல.. அவர் சொல்றாரு.. என் கணவர் சுருளிராஜன் கவிதா ஹோட்டல்ல (கண்ணதாசன் ஹோட்டல்) தான் எப்பவும் இருப்பாருன்னு. அவர் குடித்துத் தான் இறந்தார்ன்னு சொல்றாரு. அவர் இறந்த பிறகு புள்ள குட்டிங்க எல்லாம் கஞ்சிக்குக் கூட வழியில்லாம இருக்காங்கன்னு பேசுனாரு…”
இந்த மாதிரி சொல்ற அவரு என் வீட்டில் வந்து பார்த்தாரா? ஒண்ணுமே தெரியாம வருமானத்துக்காக கண்டதை எல்லாம் பேசுறாங்க..” என்று கோபத்தின் உச்சியில் சுருளிராஜன் மனைவி அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
