ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி நிறுவனங்களுக்கு கடந்த வாரம் 25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் பத்தாயிரம் கோடி மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதானி நிறுவனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் காரணமாக கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அதானி நிறுவனங்களின் பங்குகள் படுமோசமாக சரிந்தன. இதனால் அதானியின் பத்து நிறுவனங்கள் மொத்தம் 25 ஆயிரம் கோடியை இழந்ததாக கூறப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்றது என்பதும் சென்செக்ஸ் 1300 புள்ளிகளில் உயர்ந்ததை அடுத்து சரிந்த பத்து அதானி நிறுவனங்களின் பங்குகளில் 7 நிறுவனங்களில் நல்ல லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக 25000 கோடி நஷ்டத்தில் இருந்து ரூ.10,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகையும் இந்த வாரத்திற்குள் மீட்டெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டிய போதும் இதே போல் அதானி நிறுவனங்களின் பங்குகள் கீழே சரிந்து அதன் பின் உடனே மீண்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.