வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு மாதம் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த தொழில் தொடங்க முன் வந்தால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதம் ரூபாய் 25000 வழங்கப்படும் என்றும் இது அவர்களுடைய நிதிச் சுமையை குறைக்க உதவும் என்றும் கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
வேலை செய்து கொண்டிருப்பவர்கள் புதிதாக தொழில் தொடங்க ரிஸ்க் எடுப்பது என்பது அரிதாக இருந்து வருகிறது. மாத வருமானம் நின்று விடுமே என சொந்த தொழில் தொடங்க பல தயங்கி வரும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் இளைஞர்கள் அதிக அளவு ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த அறிவிப்புக்கு பின்னால் பல இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் தொடங்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேலையை விட்டு விட்டாலும் மாதம் 25 ஆயிரம் கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் அதிக அளவில் தொழில் தொடங்க முன் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.