வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!

By Sankar Velu

Published:

ஆடி மாதத்தின் நிறைவாக வரும் விரதம் வரலட்சுமி நோன்பு. இது மிக மிக முக்கியமான நோன்பு. வாங்க என்னன்னு பார்க்கலாம்.

பொதுவாக வரலட்சுமி நோன்பு என்பது ஒரு பாரம்பரிய முறை இருந்தால் தான் அதை எடுக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். புதுசாக விரதம் இருப்பவர்களும் இருக்கலாம். தொடர்ந்து செய்வதாக இருந்தால் கலசம் வைத்து வழிபடலாம். அல்லது படங்கள் வைத்து வழிபடலாம். இந்த விரதம் அவரவர் உடல் நிலை மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. உடல் பலவீனமானவர்கள் விரதம் இருக்கத் தேவையில்லை.

இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை (16.8.2024) அன்று வரலட்சுமி நோன்பு வருகிறது. இது 3 நாள்கள் வழிபாடு. வியாழக்கிழமை அன்று அம்பாளை அழைத்து, வெள்ளிக்கிழமை பூஜை செய்து, சனிக்கிழமை புனர்பூஜை செய்வது ஒரு வகை.

ஆனால் பலரும் வெள்ளிக்கிழமை அன்று அம்பாளை அழைத்து சனிக்கிழமை வீட்டில் வைத்து இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று புனர்பூஜை செய்வாங்க. இவற்றில் எது உங்களது வசதியோ அப்படியே செய்து கொள்ளலாம். படமாக வைத்து வழிபாடு செய்தால் வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை செய்வது போதுமானது.

பூஜை செய்வதற்கு உகந்த நேரம் இதுதான். வியாழக்கிழமை (15.8.2024) அன்று அம்பாளை வீட்டிற்கு அழைக்க மாலை 6 மணி முதல் 8 மணி வரை உகந்த நேரம். வெள்ளிக்கிழமை எனில் (16.8.2024) காலை 6 மணி முதல் 7.20 மணி வரை அழைக்கலாம். காலை 9 மணி முதல் 10.20 மணி வரை வெள்ளிக்கிழமை பூஜை செய்ய உகந்த நேரம்.

10 மணிக்குள் பூஜை, நைவேத்தியம் பண்ணிவிட்டு சரடும் மாற்றிக் கொள்ளலாம். அதே போல அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்வது மிகச் சிறப்பு.

புனர் பூஜைக்கு சனிக்கிழமை (17.8.2024) உகந்த நேரம் காலை 7.35 மணி முதல் 8.55 மணி வரை. அன்றைய தினம் பிரதோஷம். அதனால் காலையிலேயே பூஜை செய்வது சிறப்பு. அதன்பிறகு எனில் 10.35 மணி முதல் 12 மணி வரை செய்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை புனர் பூஜை எனில் அன்று காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை செய்து கொள்ளலாம். காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையும் பூஜை செய்யலாம்.

மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு நல்ல மலர்கள் எல்லாம் சாத்தி அலங்காரம் பண்ணிக்கோங்க. வீட்டு வாசல்ல வைத்து மகாலட்சுமியை அழைக்கலாம். கலசம் எனில் எவர்சில்வர் இல்லாத கலசமாக இருப்பது சிறப்பு.

VN
VN

கலசத்தை மஞ்சள் நிற நூலால் சுற்றிக் கொள்ள வேண்டும். அதில் முக்கால் பாகம் பச்சரிசி, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, காதோல கருகமணி, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, மாசிக்காய், அவரவர் நாட்டு நாணயங்கள் இந்தக் கலசத்துள் வைக்கலாம். தங்கம், வெள்ளி நாணயங்கள் இருந்தால் போட்டுக் கொள்ளலாம்.

தேங்காயில் சந்தனம், மஞ்சள் தடவி அதில் மாவிலை வைத்து கலசத்தில் வைக்கலாம். அம்பாளின் முகம் வைத்துள்ளவர்கள் அதை வைத்து பாவாடை அல்லது புடவை கட்டி அலங்காரம் செய்து கொள்ளலாம். இப்படி கலசத்தை அம்பாளாக அலங்காரம் செய்து கொள்ளலாம்.

இதைக் கிழக்கு பக்கம் வைப்பது சிறப்பு. வீட்டு வாசலில் கொண்டு போய் வைத்து விடுங்க. வீட்டில் யார் மூத்த சுமங்கலியோ அவர்கள் மகாலட்சுமியோட ஸ்தோத்திரங்கள் பாடி அழைத்து வீட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

அரிசி, எள் வைத்து வாழை இலை போட்டு அதில் அம்பாளை எழுந்தருளச் செய்யலாம். இந்த அம்பாளுக்கு தீப, தூப ஆராதனைகள், நைவேத்தியம் வைத்து செய்ய வேண்டும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம்.

நைவேத்தியமாக வடை, சுண்டல், பருப்ப பாயாசம், வெண்பொங்கல், இட்லி, கொழுக்கட்டை எதுவேணாலும் வைக்கலாம். பருப்பு பாயாசம், சர்க்கரைப் பொங்கல் விசேஷம். மலர்கள், வெத்தலைப்பாக்கு, துளசி, வில்வம், அருகு சேர்ப்பது சிறப்பு. அம்பாளுக்கு அர்ச்சனை செய்யுங்க.

நோன்பு சரடும் அம்பாளின் பாதத்தில் வைங்க. பூஜை முடித்ததும் சரடைக் குறிப்பிட்ட நேரத்தில் கட்டிக்கோங்க. சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பது அவரவர் வசதியைப் பொறுத்தது.

அம்பாளுக்கு ஆரத்தியும் எடுங்க. எங்க வீட்டுல நித்யமா வாசம் பண்ணி மனம், உடல் ஆரோக்கியத்தையும், செல்வ செழிப்பையும் தரணும்னு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை முடிந்ததும் எடுத்த பொருள்களை கிருஷ்ண ஜெயந்திக்க பட்சணம் பண்ண அரிசியை உபயோகிக்கலாம்.

தேங்காயை இனிப்புப் பொருள்கள் செய்ய பயன்படுத்தலாம். காசை பணம் எடுத்துப் புழங்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இப்படி புனர்பூஜை செய்வது நமது வழக்கம். சுமங்கலிப்பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் கொடுப்பது சிறப்பு. மேற்கண்ட தகவல்களை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.