மொய் விருந்து, பரத நாட்டி கலை நிகழ்ச்சி என வகை வகையாக வயநாட்டுக்கு குவியும் நிதியுதவி.. நெகிழ வைத்த மாணவியின் செயல்

By John A

Published:

வயநாடு நிலச்சரிவு இயற்கைப் பேரிடர் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இன்று ராணுவத்தின் ஒரு பகுதியினர் தங்கள் பணியை முடித்தனர். தொடர்ந்து அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் மக்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக அவை மாறி விட்டதால் அங்கு வாழ்ந்த மக்கள் இனி எங்கு செல்வார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு நிதி உதவி வழங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது நிதி உதவி பெறும் அமைப்புகள் மொய் விருந்து, கலை நிகழ்ச்சிகள் என நடத்தி அதில் வரும் வருவாயை பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் திண்டுக்கல் ஹோட்டல் அசோஷியேன், முஜீப் பிரியாணி, ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து பிரியாணி உணவுடன் மொய் விருந்து நடத்தினர். இதில் பொதுமக்கள் இலைக்கு அடியில் வைத்த தொகையை வயநாடு நிவாராண நிதிக்குச் சேர்த்தனர்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டத்தினை காப்பியடித்த ஆந்திரா, ஒடிசா.. நல்லது நடந்தா சரிதான்..

இந்நிலையில் சிறுவர்கள் பலரும் தங்கள் சேமிப்பினை வயநாடு பாதிக்கப்பட்ட பகுதியில் பள்ளி செல்ல முடியா நிலையில் இருக்கும் தங்கள் சகோதர, சகோதரிகளுக்காக சேமிப்பினை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் கள்ளக் குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீ ஹரிணி, பரத நாட்டியம் பயின்று கற்று வருகிறார்.

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் கிடைத்த தொகையுடன், தனது சேமிப்பையும் சேர்த்து ரூ.15,000-க்கான காசோலையை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து நிவாரண நிதியை வழங்கியிருக்கிறார் ஸ்ரீ ஹரிணி.