உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்

By Keerthana

Published:

சென்னை: ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், உதயநிதி துணை முதல்வராவதற்கான காலம் கனிந்துவர வில்லை என்று கூறியிருந்தார்.

உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்று, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பொன்முடி, அன்பில் மகேஸ், கீதா ஜீவன், முத்துச்சாமி, எ.வ.வேலு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கோவை எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .மாணவர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு டெபிட் கார்டு அட்டையை வழங்கினார்.

இதனிடையே தமிழ்ப் புதல்வன் திட்ட விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “துணை முதல்வர்… சாரி… அமைச்சர் உதயநிதி.. ஆக. 19-ம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்வர் எனக் கூற வேண்டும்.” என்று உடனடியாக மாற்றிக்கூறினார்.

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவது குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை பார்க்கும் போது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகப்போவது உறுதி என்பது தெரிகிறது. இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அப்போது பொறுப்புகள் அனைத்தும் யாரிடமாவது ஒப்படைக்கப்படும். அந்த வகையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்தால், அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்று பல அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.