வயநாடு நிலச்சரிவு பேரிடரில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் தங்களது வீடு உள்பட அனைத்து உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். மலையாள நடிகர்களும், தமிழ் நடிகர்களும் இதர பிரபலங்களும், அரசியல் பிரபலங்கள் பலரும் வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். மேலும் பல அமைப்புகள் பொருட்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் 1 கோடி, 2 கோடி அல்ல 15 கோடி தரத் தயார் என கைதி சுகேஷ் சந்திரசேகர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பல்வேறு தொழிலதிபர்களை ஏமாற்றி பல நூறு கோடிகளை மோசடி செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு தற்போது டெல்லியில் சிறைவாசத்தில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர்.
சுயசான்றிதழ் கட்டிட அனுமதி.. இணைய வழி வரி செலுத்துதல்.. கிராம சபை கூட்டம் குறித்து அரசு அதிரடி
பெங்களுரில் வசித்து வந்த சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் மீட்புக்கு லஞ்சம் கொடுத்த வழக்கிலும் இவர் பெயர் அடிபட்டது. இப்படி மோசடி மன்னனாக இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் தற்போது வயநாடு பேரிடருக்கு ரூ.15 கோடி நிவாரணத் தொகையை உடனடியாகத் தரத் தயார் என கேரள முதல்வருக்கு சிறையில் இருந்தவாறே கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுமட்டுமன்றி 300 வீடுகள் கட்டித் தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இவை அனைத்தும் சட்டப்பூர்வமான வங்கிக் கணக்குகளிலிருந்து அவர் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதற்கு கேரள அரசு சார்பில் இன்னும் எந்த பதிலும் வழங்கவில்லை. மேலும் சுகேஷ் சந்திரசேகர்தான் இக்கடிதத்தை எழுதியது என அவரது வழக்கறிஞரும் உறுதி செய்திருக்கிறார்.
அண்டை மாநில அரசுகளும், பெரிய பெரிய பிரபலங்களுமே சில கோடிகளைத் தாண்டி நிவாரண நிதி அளிக்காத சூழலில் சுகேஷ் சந்திரசேகர் 15 கோடி அளிக்க உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.