மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று இயற்கை எய்தினார். இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி தற்போது கேரளமாநிலத்தில் மட்டுமே உள்ளது. ஆனால் 2011-ம் ஆண்டுக்கு முந்தைய காலம் வரை மேற்கு வங்களாத்தில் இடது சாரிகள் ஆட்சியை தக்க வைத்தது. இம்மாநிலத்தின் கடைசி இடது சாரி முதல்வராக இருந்தவர்தான் புத்ததேவ் பட்டாச்சார்யா.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த புத்ததேவ் பட்டாச்சார்யா வங்க இலக்கியம் பயின்றார். அதன்பின் 1964-ல் பட்டப்படிப்பினை முடித்த புத்ததேவ் சிபிஎம் கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.
தொடர்ந்து பொதுவுடைமைக் கருத்துக்களாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு தீவிரமாகப் பணியாற்றிய அவர் 1977-ல் முதன்முறையாகப் போட்டியிட்டு காசிப்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தகவல் பண்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த அவர் அதனைத் தொடர்ந்து 1987 பொதுத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற புத்ததேவ் பட்டாச்சார்யா வங்க இலக்கிய மேம்பாட்டிற்காக அயராது உழைத்தார். மேலும் கடந்த 2001 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 2 முறை முதலமைச்சராகப் பதவி வகித்தார். நுரையீரல் தொற்றினல் அவதிப் பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில் நிமோனியா பாதிப்பு அதிகமானதையடுத்து இன்று காலை அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.
மேற்கு வங்கத்தை கம்யூனிஸ்ட்-களின் கோட்டையாக வைத்திருந்ததில் பெரும்பங்கு புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு உண்டு. அவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.