பொதுவாக மனிதனுக்கு இறப்பு என்று வந்துவிட்டால் உடனே புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜெர்மனியை சென்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இறந்த உடல்களை பாதுகாக்கும் ஒரு முறையை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிறுவனம் தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஒருவர் யாராவது இறந்து விட்டால் அந்த உடலை புதைக்காமல் அல்லது எரிக்காமல் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருக்கும் வகையில் வழிவகை செய்கிறது.
உடல் முழுவதையும் பாதுகாக்க வேண்டும் என்றால் 1.8 கோடி ரூபாய் செலவாகும் என்றும் இறந்தவரின் மூளையை மட்டும் பாதுகாப்பதற்கு 67.20 லட்சம் ரூபாய் என்றும் அறிவித்துள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி செல்லப் பிராணிகளையும் பாதுகாத்து வைக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இறந்தவரின் உடல்களை பெறும் இந்த நிறுவனம் முதலில் திரவ நைட்ரஜனால் நிரப்பப்பட்ட ஒரு பெட்டியில் பாதுகாத்து வைக்கிறது. அதன் பிறகு மைனஸ் 198 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அந்த உடல் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் நமது முன்னோர்களின் உடலை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு சிலர் இந்த நிறுவனத்தில் தங்களது முன்னோர்களை பாதுகாத்து வைக்க முன் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை உலகம் முழுவதும் ஒரு சில ஆண்டுகளில் பரவினால் இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் செய்யாமல் பாதுகாப்பாக வைத்திருந்து நம் முன்னோர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அடுத்த தலைமுறையினருக்கு காண்பித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.