வயநாடு நிலச்சரிவு.. என்னையும் கூட்டிட்டு போங்க.. ராணுவத்திற்கு 3 ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்..

By Ajith V

Published:

பொதுவாக மலையை ஒட்டி இருக்கும் ஊர்களில் மழை பெய்தாலே வேகமாக நிலச்சரிவு உருவாகி மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உண்டு பண்ணும். இந்தியாவின் பல இடங்களில் இது போன்று பல இடங்களில் நிலச்சரிவு உருவாகி உள்ள நிலையில், சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் நிலைகுலைய வைத்துள்ளது.

அப்பகுதியில் இதற்கு முன்பே சில நிலச்சரிவுகள் ஏற்பட்ட போதிலும் அரசு பெரிய அளவில் விழிப்புணர்வு மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. அதன் காரணமாக, தற்போது பலரையும் உறைய வைக்கக் கூடிய அளவிலான இழப்பு உருவாகி உள்ளது. வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, அப்பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மூழ்கி போக, ஆயிரக்கணக்கான மக்கள் இதில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதுவரையில் 400 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான ஆட்களையும் மீட்புக்குழு மீட்டுள்ளது.

இன்னொரு பக்கம் தங்கள் உறவினர்களை பலி கொடுத்த பலரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உடல்கள் கிடைத்து விடாதா என ஏக்கத்துடன் கண்ணீர் வழிய தேடி வரும் சம்பவங்களும் காண்போரை உடைய வைக்கிறது. இதனிடையே, அப்பகுதியில் ராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வேகமாக பணிகளை முடிக்கும் பொருட்டு செயல்பட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில், 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், வயநாட்டில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினருக்கு எழுதிய கடிதம், பலரையும் உருக வைத்துள்ளது. 3 ஆம் வகுப்பு படிக்கும் ரயான் என்ற மாணவன் எழுதிய கடிதத்தில், வயநாடு நிலச்சரிவில் பல சிக்கல்களை ராணுவத்தினர் சந்தித்து வருவதாகவும், பிஸ்கட் சாப்பிட்டு பசியை போக்கி சவாலான பணிகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவத்தினரின் இந்த அர்ப்பணிப்பை பார்க்கும் போது சல்யூட் அடிக்க தோன்றுவதாகவும் அவர்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட ஆர்வத்துடன் இருப்பதாகவும் ரயான் குறிப்பிட்டுள்ளார். சிறுவனின் இந்த வார்த்தைகள் பலரையும் உத்வேகப்படுத்த இதனை கவனித்த ராணுவத்தினர் சிறுவனுக்கு பதில் அளித்துள்ளனர்.

அந்த பதிவில், சிறுவன் ரயானின் வார்த்தைகள் மனதை தொட்டதாகவும் உங்களை போன்ற ஆட்கள் ராணுவத்தில் இணைவது பெருமையே என குறிப்பிட்டுள்ளனர். ராணுவ சீருடை அணிந்தபடி எங்களுடன் நீங்கள் நிற்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறோம் என்றும் தேசத்திற்காக ஒன்றாக செயல்படுவோம் என்றும் உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பெரும் துயரத்திலும் அங்கே சிக்கி இருப்பவர்களுக்காக சிறுவனுக்கு தோன்றிய எண்ணம், ஒரு குட்டி சந்தோசத்தை பலர் மனதிலும் வருடி சென்றது என்பது தான் நிதர்சனமான உண்மை.