வயநாடு நிலச்சரிவில் நெஞ்சை நொறுக்கும் சோகம்.. வெறும் கையை மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தை

By John A

Published:

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கேரளாவையே புரட்டிப்போட்ட வயநாடு நிலச்சரிவு இயற்கை பேரிடருக்கு இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இன்னும் பலர் மண்ணில் புதையுண்டு அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயினர். நாட்டையே உலுக்கிய இந்த கோர இயற்கைப் பேரழிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது.

முண்டக்கை, சூரல்மலை போன்ற பகுதிகள் அடையாமே தெரியாத அளவிற்கு உருமாறிப் போனதால் நிலைமை முற்றிலும் மோசமாகியது. மழையும் நிற்காமல் பெய்து கொண்டே இருப்பதால் அவ்வப்போது மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கியவர்கள் தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை தேசிய பேரிடாக அறிவிக்கக் கோரி அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்திய நிலையில் அவ்வாறு தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடம்கிடையாது என பா.ஜ.க மூத்த எம்.பி. வி.முரளிதரன் விளக்கம் கொடுதிருக்கிறார்.

வயநாடு பேரழிவிற்கு உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்.. விக்ரம், சூர்யா வரிசையில் இணைந்த அடுத்த பிரபலம்

இந்நிலையில் பல உடல்கள் சிதைந்த நிலையிலும் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்த ஒரு பெண்ணின் கை மட்டும் மீட்புப் பணியின் போது கிடைத்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய அந்தப் பெண்ணின் கை துண்டாகி உயிரிழந்திருக்கிறார்.

ஜிசா என்ற அந்தப் பெண்ணின் விரலில் இருந்த திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஜிசாவின் தந்தை ராமசாமி அடையாளங்கண்டு தனது மகள் தான் என்பதை உறுதி செய்தார். பின்னர் கையை மட்டும் ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி வைத்து இறுதிச் சடங்கு செய்துள்ளார். இந்தச் சம்பவம் காண்பவர்களை கண்கலங்க வைத்தது.

மேலும் நிலச்சரிவில் சிக்கிய 200 பேர் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து உதவிக்கரங்கள் குவிகிறது. அவர்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.