இனி ரேஷன் கடைக்கு பை தூக்கிட்டு போக வேண்டாம்.. வரப்போகும் அசத்தல் பிளான்..!

By John A

Published:

தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 2.23 கோடி ஸ்மார்ட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் 34793 நியாய விலைக்கடைகள் மூலமாக விலையில்லா அரிசி, கோதுமை மானிய விலையில் சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் பங்கும் இதில் அடங்கும். இதன் மூலம் தான் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் பசியாறுகின்றன. மேலும் ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், அட்டை வகையை மாற்றுதல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.

முதலில் புத்தக வடிவில் கொடுக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவில் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டது. மேலும் பயனரின் கைப்பேசி எண்ணிற்கு வாங்கிய பொருட்களின் விபரமும் உடனுக்குடன் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

இதனால் நுகர்வோருக்கு சரியான முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்றவை மூடைகளில் அந்தந்தப் பகுதி நியாய விலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

பின் எடையாளர் அந்த மூடைகளைப் பிரித்து கார்டுகளுக்கு ஏற்ப பொருள் வழங்குவது வழக்கம். ஆனால் இப்படி வழங்கும் போது எடைக் குறைவாக இருக்கிறது என பொதுமக்கள் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் எடை அளவில் மாறுபடுவதை வீடியோவாகவும் பதிவிட்டு தங்களது குறைகளைத் தெரிவித்து வந்தனர்.

ஜூலையில் மட்டும் 8000 ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு.. இந்தியாவில் மட்டும் இத்தனை பேர்களா?

இதற்கு முடிவு கட்டும் விதமாக தற்போது சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்கள் இனி பாக்கெட்டுகளில் அடைத்து அதன்பின் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதனால் சரியான எடையில் பொருட்களை வழங்கலாம். இந்த நடைமுறையை தற்போது முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு நியாய விலைக்கடையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 234 தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு நியாய விலைக்கடையைத் தேர்ந்தெடுத்து இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. சோதனை ஓட்டமாக நடைபெறும் இந்த முறை சரியான வகையில் இருப்பின் இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

இவ்வாறு செய்யும் போது எடைக் குறைவு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சரியான அளவில் பொருட்கள் நுகர்வோருக்குக் கிடைக்கும்.