நான் என்ன கொறஞ்சவனா.. கேப்டனான முதல் தொடரிலேயே ரோஹித்திற்கு நிகரா சூர்யகுமார் செஞ்ச சம்பவம்..

By Ajith V

Published:

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை கைப்பற்றி இருந்ததையடுத்து தொடர்ந்து நடந்த இரண்டு டி20 தரப்பு தொடரிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் மீதமிருந்த நான்கு போட்டிகளை வென்று இந்திய அணி அந்த தொடரையும் சொந்தமாக்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி வென்றிருந்தது. இதில் நடந்த மூன்று போட்டிகளிலும் இலங்கை அணியின் முதல் மூன்று பேர் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் மற்ற எட்டு வீரர்களும் ஒருமுறை கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கு சிறந்த உதாரணமாக கடைசி டி20 போட்டியில் 12 பந்துகளில் 9 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்த போதும் அவர்களால் அது முடியாமல் போனது. இதைவிட மோசமாக ஒரு சர்வதேச அணியால் ஆட முடியுமா என்ற நிலைமைக்கு இலங்கையின் மீது ஏராளமான விமர்சனங்களும் உருவாகி இருந்தது.

இதில் மற்றொரு சிறப்பம்சமாக இரண்டு ஓவர்களில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்டபோது ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் ஆகிய இரண்டு பேர் தான் பந்து வீசீ இருந்தனர். இந்த இரண்டு பேருமே பந்து வீச்சில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்கள். அவர்கள் பந்தில் கூட ரன் அடிக்க முடியாமல் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது பெரிய அளவில் ரசிகர்களை கலங்க வைத்திருந்தது.

அதிலும் சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் சிறப்பாக வீசி 2 விக்கெட் எடுத்ததுடன் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அனைவரும் சிராஜ் கடைசி ஓவரை வீசுவார் என எதிர்பார்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரை வீசி இந்திய அணி வெற்றி பெறவும் உதவியிருந்தார்.

சூர்யகுமார் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் சிறந்த தலைவராக அணியை வழிநடத்தி பேட்டிங்கிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இதனால் தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றிருந்த நிலையில் அதன் மூலம் மிக முக்கியமான ரோஹித் சர்மாவின் சாதனையும் தற்போது அவர் சமன் செய்துள்ளதை பற்றி தற்போது பார்க்கலாம்.

அனைத்து போட்டிகளிலுமே எதிரணியை வென்று இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்ததுடன் அதே டி20 தொடரில் தொடர் நாயகன் வென்றது இதற்கு முன்பாக இந்திய கேப்டனாக ரோஹித் ஷர்மா மட்டும் தான். அவரைத் தொடர்ந்து தற்போது சூர்யகுமார் யாதவ் தான் டி20 இந்திய அணியின் கேப்டனாக எதிரணியை ஒயிட் வாஷ் செய்ததுடன் அந்த தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.