12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி பூத்தார் போல எப்போதாவது அரிதாக நடைபெறும் ஒரு சம்பவம் தான் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர் சிரிப்பு என்பது. கொல்கத்தா மற்றும் லக்னோ அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இருந்தபோதிலும் டக் அவுட்டில் இருக்கும் போது கோபமான முகத்துடன் சற்று ஆக்ரோஷமான மனநிலையில் தான் கம்பீர் இருப்பார்.
இதனால் கம்பீர் சிரித்த புகைப்படம் இருந்தாலே அது அபூர்வமான ஒரு புகைப்படமாகத்தான் வருங்காலத்தில் நிச்சயம் இருக்கும். கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கம்பீர் இருக்க அந்த அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையையும் வென்றிருந்தது.
அப்போது அவரும், சுனில் நரைனும் இணைந்து சிரித்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வந்த நிலையில் கம்பீரை இனிமேல் எப்படி இது போல் சிரித்து பார்ப்போம் என்று தான் அனைவருமே ஏக்கத்தில் இருந்தனர். ஆனால், அதற்கான விடை சில மாதங்களிலேயே கிடைத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த டி20 போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் சொந்தமாக்கி இருந்தது. தொடர்ந்து கடைசி போட்டியில் அணியில் வீரர்களை மாற்றியும் களமிறக்கி இருந்தனர். இன்னொரு பக்கம் இலங்கை அணி தொடரை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்க, சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 137 ரன்களில் கட்டுப்படுத்தி இருந்தது.
இதனால் எளிதாக இலங்கை அணி வெற்றி பெற்றுவிடும் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். முதல் இரண்டு போட்டிகளைப் போல இந்த முறையும் இலங்கையின் டாப் ஆர்டர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். வெற்றிக்கு மிக அருகில் அவர்களை அழைத்துக் கொண்டு வந்த போதிலும் பின்னர் வந்த வீரர்களால் அதை தொட முடியாமல் அவமானமாக பரிதாப தோல்வி அடைந்தனர்.
12 பந்துகளுக்கு ஒன்பது ரன்கள் மட்டுமே வேண்டும் என்ற நிலை இருந்த போதிலும் அதனை எட்ட முடியாமல் இலங்கை அணி தோற்றது பலரையும் கலங்க வைத்துள்ளது. அதிலும் 19 வது ஓவரை ரிங்கு சிங் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதேபோல கடைசி ஓவரை சூர்யகுமார் வீசி 5 ரன்கள் கொடுத்து போட்டி டையில் முடியும் வகையில் மாற்றி இருந்தார்.
இப்படி அனுபவம் இல்லாத இரண்டு பந்து வீச்சாளர்கள் பெயரில் கூட 9 ரன் அடிக்க முடியாமல் கேவலமாக தோற்பது பயிற்சியாளர் ஜெயசூர்யா மற்றும் இலங்கை வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்களை கிரிக்கெட் பிரபலங்களும் முன்வைத்து வருகின்றனர். இலங்கை ரசிகர்களை இந்த விஷயம் விரக்தி அடைய வைத்திருந்தாலும் இந்திய ரசிகர்கள் மிக அதிகமாக இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு காரணம் இலங்கையின் பேட்டிங் மற்றும் ரிங்கு சிங் பவுலிங்கை பார்த்து கம்பீர் சிரித்தது தான். 19 வது ஓவரை ரிங்கு சிங் வீசியபோது யாரும் எதிர்பாராத வகையில் அபூர்வமாக விக்கெட் எடுத்திருந்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த கவுதம் கம்பீர் தன்னை அறியாமலே ஒரு சில வினாடிகள் சிரித்தது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை அதிகம் கலக்கி வருகிறது.