ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி.. ஓய்வு பெற்றவர்களை குறி வைக்கும் மர்ம கும்பல்..!

By Bala Siva

Published:

ஆன்லைனில் பங்கு வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஓய்வு பெற்ற முதியவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

பொதுவாக ஓய்வு பெற்றவர்களிடம் லட்சக்கணக்கில் மற்றும் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் மர்ம கும்ப கும்பல் சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களின் லிஸ்ட்டை முறைகேடாக எடுக்கிறது.

அதன்பின் அவர்களை தங்களது போலியான வாட்ஸ் அப் குரூப்பில் சேர்த்து தாங்கள் அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்வதாகவும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறுகிறது.

இதனை நம்பி முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதியவர்கள் முதலீடு செய்யும்போது அந்த தொகை மிக அதிக அளவு லாபம் காட்டுவதாக டிஜிட்டலில் தோன்ற வைக்கிறது. இதனால் ஓய்வு பெற்றவர்கள் தங்கள் முதலீடு அதிக லாபம் கொடுப்பதாக எண்ணி மேலும் மேலும் அதில் முதலீடு செய்வதாகவும் ஒரு கட்டத்தில் திடீரென தங்கள் நிறுவனம் நஷ்டம் அடைந்து விட்டது என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவதாகவும் இதனை அடுத்து கோடிக்கணக்கில் முதலீடு செய்த ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை ஏமாந்து இருப்பதாகவும் காவல்துறையில் கடந்த சில நாட்களாக அதிக அளவு புகார் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

செபியிடம் லைசன்ஸ் பெற்றவர்களிடம் மட்டுமே பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் வாட்ஸ் அப் குரூப் மூலம் முதலீடு செய்யுங்கள் என்று கேட்பவர்களிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இந்த மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.