இன்று (26.7.2024) ஆடி மாதத்தின் 2வது வெள்ளி. இந்த நாளில் என்னென்ன சிறப்புகள் என்று பார்ப்போமா…
இன்றைய தினம் தேய்பிறை சஷ்டியோடு வருகிறோம். இந்தநாளில் காமாட்சி அம்பிகையை வழிபட்டால் குழந்தை பேறு நிச்சயமாக நடக்கும்.
பொதுவாகவே ஆடி மாசம் எல்லாம அம்பிகையின் கோவில்களுக்கும் போவோம். பலரும் வழக்கமாக ஒரு சில அம்பிகையை விசேஷமாக வைத்து வழிபடுவர். காமாட்சி, விசாலாட்சி, மீனாட்சி, கருமாரி, மாரியம்மன் என்று ஒவ்வொருவருக்கும் விசேஷமாக ஒரு அம்பிகை இருப்பாள்.
அவற்றில் ஒன்று தான் காமாட்சி. இவள் 3 சக்திகளையும் ஒன்றாக அடக்கியவள். துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று சொல்லும் முப்பெரும் தேவியர்களை ஒன்றாக அடக்கிய ரூபமானவள். காமனைப் பழிக்கும் கண்களை உடையவள். அதனால் காமாட்சி.
அற்புதமான ரூபினி. அலங்காரம் பண்ணி வச்சா பார்த்துக்கிட்டே இருக்கலாம். காஞ்சி, மாங்காடு என காமாட்சி அம்பிகை உள்ள எல்லா ஊர்களிலும் சிறப்புக்குரிய கோவில் உண்டு.
காமாட்சி ஒரு பெரியம்மா மாதிரி இருப்பாங்க. மீனாட்சியை குழந்தை மாதிரியே பார்த்துப் பழகிட்டோம். குடும்பத்தின் மூத்த சுமங்கலி போல் இருப்பவள் தான் காமாட்சி. நம்மை எல்லாம் வழிநடத்திச் செல்பவள்.
குலதெய்வமே தெரியாதவர்கள் கூட காமாட்சியை ஏற்றுக்கொண்டு அவளை சரணாகதியாக்கி வழிபடுங்க. வைஷ்ணவத்தில் உள்ளவர்கள் பெருமாளை குலதெய்வமாக எடுத்துக்கலாம்.
முருகனையே வளர்த்த தாயாக விளங்கக்கூடியவள் அம்பாள். குழந்தை வரம் வேணும் என்பவர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் உபவாசம் இருந்து இரவு மாலை 6 மணி வரை வழிபடலாம்.
காமாட்சி அம்பாளின் படம் இருந்தால் மலர்கள், குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்க. கல்யாணம் செய்ய வேண்டும் என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதே போல அடுத்த வாரம் வரும் 3வது வெள்ளிக்கிழமை ரொம்பவும் விசேஷம்.
அன்று மாத சிவராத்திரி. அன்றைய தினம் மிகவும் சிறப்பான நாள். அன்று அன்னையையும், அப்பனையும் வணங்கினால் கணவன், மனைவி வாழ்க்கை ரொம்பவே நல்லாருக்கும். அன்றைய தினம் இருவருமே விரதம் இருக்கலாம்.
சிவபெருமான், அம்பாளின் விக்கிரகம் இருந்தால் அன்றைய நாள் காலையில் குளித்ததும் தண்ணீர், பால் வைத்து அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து மனசார உங்கள் பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள்.
கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் பக்கத்தில் உள்ள கோவில்களுக்குப் போய் அபிஷேகப் பொருள்கள் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுங்கள்.
குளிர குளிர அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதைப் பார்க்கும்போது நம் வினைகள் எல்லாம் நீங்கி விடுகிறது. அம்பாளின் மனம் குளிருவதைப் போல நமது மனதையும் அம்பாள் குளிரச் செய்வாள்.
ஏதாவது ஒரு வாரத்தில் கலசம் வைத்து வேப்பிலை வைத்து படையலிட்டு வழிபாடு செய்யுங்க. 4வது வெள்ளியில் கருட பஞ்சமி. 5வது வெள்ளி வரலட்சுமி நோன்பு. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.