தமிழ் சினிமாவில் அதிகமாக விலங்குகளை வைத்துப் படம் எடுக்கும் நிறுவனமாக சாண்டோ சின்னப்ப தேவரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனம் விளங்கியது. இந்த நிறுவனத்தின் மூலம் அதிக அளவிலான பொருட்செலவில் மிருகங்களை வைத்துப் படங்கள் எடுக்கப்பட்டு அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியது. யானை, ஆடு, சிங்கம், பாம்பு என எதையும் அவர் விடவில்லை. அந்தக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தைப் போலவே தற்போது விலங்குகளை வைத்து ஹிட் படங்களைக் கொடுக்கும் இயக்குநராக மாறியிருக்கிறார் இயக்குர் பிரபு சாலமன்.
அர்ஜீன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரபு சாலமன் அடுத்து கிங், உசுரே, லீ, கொக்கி ஆகிய படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் சுமாராகவே போனது. இதனால் தனது ரூட்டை மாற்றி காடுகளின் பக்கம் திரும்பினார். அடுத்ததாக அவர் இயக்கிய மைனா படம் சூப்பர் ஹிட் ஆனது. இயற்கை அழகையும், கிராமத்து காதலையும் கொடுத்து படத்தினை வெற்றியாக்கினார். இதனையடுத்த அவர் இயக்கிய கும்கி படம் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இப்படம் தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருதினைப் பெற்றது. இப்படத்தில் யானைப் பாகன்களின் வாழ்வியலைப் பதிவு செய்தார்.
இதனையடுத்து காடு சார்ந்த படங்களையே இயக்கினார். ராணா டகுபதி ஹீரோவா நடித்த காடன் படம் முற்றிலும் யானைகளை வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. கடைசியாக கோவை சரளா நடித்த செம்பி கதையை இயக்கினார். இப்படமும் காட்டில் படமாக்கப்பட்டதே. இப்படி காடுகள், மலைகள், விலங்குகள் என இயற்கையை மையமாக வைத்தே படங்களை இயக்கி வரும் பிரபுசாலமன் அடுத்ததாக மீண்டும் ஒரு விலங்கு கதையைப் படமாக்க உள்ளார். இந்தப் படம் சிங்கத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.
ஆசியாவிலேயே முதன் முறையாக கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் முற்றிலும் ஒரிஜினில் சிங்கத்தை வைத்து இப்படம் தயாராகிறது. இந்தப் படத்திற்கு மாம்போ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபு சாலமன் படங்களின் ஆஸ்தான இசையைமப்பாளரான டி.இமானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். இவர்கள் காம்போவில் உருவான பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனவை. தற்போது இந்தப் படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.