தொல். திருமாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பீங்களா? கொளுத்திப் போட்ட தமிழிசை..

By John A

Published:

சென்னை : தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் திமுகவுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என செய்திகள் வருகிறது. ஆனால் உதயநிதியோ இதுபற்றி கடந்த வாரம் நடைபெற்ற திமுக இளைஞரணியின் ஆண்டுவிழாவில் முதலமைச்சருக்கு அனைத்து அமைச்சர்களுமே துணையாக இருப்போம். நான் துணை முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்ற செய்தியானது வெறும் யூகங்கள் மட்டுமே என்று கூறியிருந்தார்.

மேலும் தமிழக அமைச்சரவையில் கூடிய விரைவில் மாற்றங்கள் நிகழலாம் என்று செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் துணை முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொணியில் கருத்துத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜனும் துணை முதலமைச்சர் பதவி குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் சமூக நீதி பற்றி அதிகம் பேசும் திமுக கூட்டணியில் உள்ள தொல். திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவியைத் தரத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என அனைத்திலும் விலையேற்றம் செய்யும் திமுகவினை 2026-ல் மக்கள் மீண்டும் ஆட்சியில் ஏற்ற மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

உங்கள் வீட்டு மின் கட்டணத்தை இனி அடியோடு குறைக்கலாம்.. பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த சூப்பர் திட்டம்

மேலும் நீர்பாசனத் துறை அமைச்சர் துரை முருகனும், துணை முதலமைச்சர் குறித்த கேள்விக்கு, துணை முதல்வர் பதவியை யார் வேண்டாம் என்று சொல்வார்கள், இது அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. கூட்டு முயற்சியால் செய்யப்பட வேண்டியது என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக-வில் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, கனிமொழி, டி.ஆர்.பாலு போன்ற சீனியர்கள் அதிகம் இருக்கும் போது உதயநிதிக்கு அடுத்தடுத்து புரேமோஷன் வழங்கப்படும் என்ற தகவல்களால் கட்சிக்குள்ளேயே அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2006ல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் துணை முதல்வராக அப்போது ஸ்டாலினும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.