தமிழ்ப்படங்களில் ஒரு காலத்தில் படத்தின் தொடர் படங்களாக வந்தாலும் அதன் பெயர் மாறியே வரும். முதல் பாகம், 2ம் பாகம் என்று வராது. உதாரணத்திற்கு நாளைய மனிதன் படத்தின் இரண்டாம் பாகமாக அப்போது அதிசய மனிதன் வந்தது.
அந்த வகையில் சில படங்களே இப்படி வந்தன. அந்தப் படங்களும் 2வதாக வரும் படங்கள் முதல் படத்தைப் போல சோபிக்கவில்லை. இப்போது படங்களின் பெயர்கள் வைப்பதற்கு பஞ்சம் வந்து விட்டதோ என்னவோ பல படங்கள் 2ம் பாகமாக வந்து கொண்டே இருக்கிறது.
சில படங்கள் 3 முதல் 4 பாகம் வரை வந்து விட்டன. சூர்யாவுக்கு சிங்கம் படம் 2, 3 வரை வந்து விட்டது. அது போல ராகவா லாரன்ஸ்க்கு முனி, காஞ்சனா படங்கள் 2, 3 என தொடர்கின்றன.
கமலுக்கு விக்ரம், இந்தியன் படமும் 3 பாகங்கள் வரை வர உள்ளது. கைதி 2ம் பாகம் வர உள்ளது. ரஜினிக்கு எந்திரன், 2.0வாக வந்து விட்டது. அஜீத்துக்கு பில்லா படம் 2 பாகங்களாக வந்து விட்டது. தனுசுக்கு வேலையில்லா பட்டதாரி 2 பாகங்களாக வந்து விட்டது.
அதே போல மாரி 2 பாகங்களாக வந்து விட்டது. பொன்னியின் செல்வன் படம் கூட இரு பாகங்களாக வந்து விட்டது. பாகுபலியும் 2 பாகங்கள் தான். சத்யராஜிக்கு அமைதிப்படை 2 பாகங்களாக வந்து விட்டன.
2012ல் வெளியான கலகலப்பு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை இயக்கியவர் சுந்தர்.சி. இந்தப் படத்தில் விமல், சிவா, ஓவியா மற்றும் அஞ்சலி உள்பட பலர் நடித்து இருந்தனர்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2ம் பாகம் 2018ல் வெளியானது. ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, காத்ரின் தெரசா உள்பட பலர் நடித்து இருந்தனர். ஆனால் இந்தப் படம் முதல் பாகத்தில் இருந்த அளவு வரவேற்பு பெறவில்லை.
அதே போல் அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 4 ம் பாகம் வரை இயக்குனர் சுந்தர்.சி. தொடர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப் பார்க்கும்போது இந்த 3 நடிகர்களின் படங்கள் தான் ஒரே பாகத்தோடு நின்று உள்ளன. அவர்கள் விஜய், சிம்பு, பிரசாந்த் படங்கள் தான். என்ன ஒரு ஒற்றுமை என்று பார்த்தீர்களா?