பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, ஜொமைட்டோ.. தினமும் ரூ.1.5 கோடி கூடுதல் வருமானம்?

By Bala Siva

Published:

ஸ்விக்கி, ஜொமைட்டோ நிறுவனங்கள் பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்தி உள்ள நிலையில் தினமும் இந்த நிறுவனங்களுக்கு 1.25 கோடி  முதல் 1.50 ரூபாய் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமைட்டோ நிறுவனங்கள் தங்கள் செயலியை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. பிளாட்பார்ம் கட்டணம் என்று கூறப்படும் இந்த கட்டணம் இதற்கு முன் ரூ.5 என இருந்த நிலையில் தற்போது 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரை பொருத்தவரை இந்த கட்டண உயர்வு ஒரு ரூபாய் என்பது சாதாரணமாக இருந்தாலும் தினமும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஆர்டர்களை பெற்று வரும் நிலையில் இதன் மூலம் இந்த நிறுவனங்களுக்கு தினமும் ஒரு கோடிக்கு மேல கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வருமானம் முழுவதும் நேரடியாக நிறுவனங்களுக்கே செல்வதால் இந்த கூடுதல் வருமானம் மூலமாக செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்றும் லாபத்தை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த கட்டணம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி கட்டணம், உணவக கட்டணம், கையாளும் கட்டணம், ஆகியவை ஒவ்வொரு நகரத்திற்கு மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்விக்கி நிறுவனம் பிளாட்பார்ம் கட்டணத்தை இரண்டு ரூபாய் உயர்த்தியது. அதேபோல் ஜொமேட்டோ நிறுவனமும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த கட்டணத்தை செயல்படுத்த தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இரு நிறுவனங்களும் ஒரு ஆர்டருக்கு 6 ரூபாய் என பிளாட்பார்ம் கட்டணத்தை நியமனம் செய்துள்ளன.

மேலும் பீக் நேரங்களில் ஆர்டர் செய்தால் பிளாட்பார்ம் கட்டணம் 9 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் சில நேரங்களில் 10 ரூபாய் கூட வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது .