இனி தமிழ்ல பெயர் பலகை இல்லையா? அதிரடி காட்டப் போகும் தமிழ் வளர்ச்சித்துறை.. வணிக நிறுவனங்களே உஷார்..!

By John A

Published:

சென்னை : என்னதான் ஒருபக்கம் தமிழ் தமிழ் என்று தொண்டை வலிக்க கத்திக் கொண்டிருந்தாலும் அமைதியாக இந்தியும், ஆங்கில மொழியும் இரண்டறக் கலந்து விட்டது. குறிப்பாக வட இந்தியர்களின் அதிக அளவிலான வருகை காரணமாக அவர்கள் செய்யும் தொழில்களின் அனைத்துப் பெயர்களும் இந்தி மொழியிலேயே வைக்கப்படுகிறது. இதனால் மெல்ல மெல்ல தமிழ் மொழி அடுத்த தலைமுறையினரிடம் அழிந்து வருகிறது. மேலும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி மோகம் அதிகமாக உள்ளதால் அரசுப்பள்ளியிலேயே ஆங்கில வழிக் கல்வி போதிக்கப்படுகிறது.

எனினும் தமிழ்மொழியின் தொன்மையைப் பாதுகாக்கும் பொருட்டும், தமிழை வளப்படுத்தும் நோக்கிலும் தமிழ் வளர்ச்சித் துறை என்ற துறை உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழ்மொழி வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக செம்மொழி மாநாடு நடத்துதல், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுகிறது. தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மு.பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில் ஏற்கனவே அனைத்து நிறுவனங்களின் பெயர்களும் தமிழ் மொழியில் மாற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த உத்தரவை வணிக நிறுவனங்கள் எதுவும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இதனால் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் ஆங்கிலம் மொழிக் கலப்புடனே இருக்கின்றன. இதற்கு முடிவு கட்டும் விதமாக 10 நபர்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளும் இனி தமிழில் வைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை சம்பளத்தை மிஞ்சும் கிராமத்து ஜுஸ் கடை.. வைரலான ஆட்கள்தேவை பேனர்.. சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இதனை தொழிலாளர் நலத் துறை அமைச்சகமும் கருத்தில் கொண்டு அதனை செயலாற்றி வருகிறது. இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் பெயரை தமிழில் மாற்றி அதனை பெயர்பலகையில் வைத்து அதற்கான சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இதனை முழுவதும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர கால அவகாசம் வழங்க வேண்டும் என வணிக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.