சென்னை: சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.பரங்கிமலையில் பல ஆண்டுகளாக இருந்த பகுதியை அரசுஅதிரடியாக மீட்டது. அதேநேரம் அங்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் அடியோடு இடித்துதள்ளப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமல குத்தகைக்கு வாங்கிய இடத்தை குத்தகை காலம் முடிந்ததும் இடத்தை காலி செய்யாமல், அங்கு புதிய கட்டிடம் கட்டியதை கண்டுபிடித்த அதிகாரிகள், அதனை இடித்து அகற்றி உள்ளனர்.
சென்னை பரங்கிமலை ஜி எஸ் டி சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை காலம் முடிந்தும் அந்த இடத்தை அவர்கள் காலி செய்யவில்லை..
தனியார் கல்லூரி மற்றும் பள்ளி, கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் வணிக வளாக நிலத்தை அதிரடியாக கையகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனிடையே அரசு நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் முயன்றபோது, உடனடியாக அந்த கல்லூரி நிர்வாகம் நீதிமன்றம் சென்றதால் தற்காலிகமாக பள்ளி மற்றும் கல்லூரி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கையகப்படுத்திய இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து அரசு இடத்தில் இருந்த இனிப்பு கடை மற்றும் கல்லூரி சார்பில் விரிவுப்படுத்தி புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை அதிரடியாக இடித்து தள்ளினர்.பின்ர் அந்த இடத்துக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் இது தொடர்பாக பரங்கிமலை போலீசில் வருவாய் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.