தமிழ் சினிமா கண்ட சிறந்த நடிகர்களில் ஒருவர் மட்டுமில்லாமல், சிறந்த மனிதரில் ஒருவரான விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி நோய் வாய்ப்பட்டு அதிலிருந்து பெரிதாக மீள முடியாமல் போய் காலமாகி இருந்தார். ஒரு காலத்தில் சிங்கம் மாதிரி இருந்ததுடன் பல நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் வாழ்க்கை கொடுத்திருந்தார்.
அது மட்டுமில்லாமல், சினிமாவில் பணிபுரியும் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் மிக நெருக்கமாக அவர்களுடன் பழகுவதையே வழக்கமாக வைத்திருந்த விஜயகாந்த், ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியலிலும் கால் பதித்திருந்தார். மெல்ல மெல்ல தனது கட்சியையும் முன்னணி இடத்திற்கு எடுத்து வந்து கொண்டிருந்த போது தான் திடீரென அவரது உடல்நலம் நலிவடைய தொடங்கியது.
இதில் இருந்து அவரால் முழுமையாக மீண்டு வர முடியாத சூழலில், பேசுவதற்கும் நடப்பதற்கும் கூட மிகுந்த கஷ்டமான நிலை தான் அவருக்கு இருந்து வந்தது. இதனால், விஜயகாந்த் தொடங்கிய கட்சியை மனைவி மற்றும் மகன்கள் பார்த்து வர, நாளுக்கு நாள் விஜயகாந்தின் உடலும் கவலைக்கிடமானது. அப்படி ஒரு சூழலில் தான், உடல் மற்றும் வயது காரணமாக அவர் மறைந்தும் போனார்.
விஜயகாந்த் உயிருடன் இருந்த போதும் அவர் செய்த நல்ல காரியங்கள் அவருடன் பணிபுரிந்த பிரபலங்கள் பலரும் நிறைய கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்கள். இதே போல, அவரது மறைவுக்கு பின்பும் கூட சத்தமே இல்லாமல் நிறைய உதவிகளை சினிமாவில் இருப்பவர்களுக்கே செய்தது பற்றி நிறைய உருக்கமான தகவல்களும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அந்த வகையில், காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் பாவா லட்சுமணன் விஜயகாந்த் பற்றி தெரிவித்த கருத்தும் தற்போது பலரையும் மனம் உருக வைத்துள்ளது. இது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த பாவா லட்சுமணன், “ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் நான் நடித்து கொண்டிருந்த போது இடைவேளையில் வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது விஜயகாந்த் என்னை அழைப்பதாக ஒருவர் கூற, நான் அங்கே சென்றேன்.
பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடைபெற, அங்கே வந்த விஜயகாந்த், ‘என்ன ரஜினிகாந்த் படத்துல தான் நடிப்பியா?’ என கேட்டுக் கொண்டு அங்கிருந்த லாட்ஜ் ஒன்றிற்கு இரவு வரும்படி சொல்லி விட்டு சென்றார். தொடர்ந்து அங்கே போனதும் இயக்குனர் ஒருவர் இருக்க, அவரிடம் ‘இவனுக்கு ஏதாவது கேரக்டர் இருந்தா கொடுங்க’ என விஜயகாந்த் கூறினார்.
அப்போது வசனம் இல்லாத ஒரு எம்எல்ஏ கதாபாத்திரம் தான் இருப்பதாக அந்த இயக்குனர் கூறியதும், ‘எனக்கே 4 நாள் வசனமே இல்லாம தான் போய்கிட்டு இருக்கு. வீட்டு வாடகையாச்சும் கொடுத்துட்டு போகட்டும். அந்த கேரக்டரை கொடுங்க யா’ என கூறினார்’ என்று நெகிழ்ச்சியுடன் பாவா லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார். ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் அவரது வீட்டு வாடைகாக்காவது அந்த காசு பயன்படும் என்ற எண்ணத்தில் விஜயகாந்த் செய்த செயல் தற்போது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.