துபாய் -சென்னை-இலங்கை விமான பயணிகள் எண்ணிக்கை அடியோடு சரிவு.. ஆடிப்போக வைத்த காரணம்

சென்னை: 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால், சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை-இலங்கை இணைப்பு விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பலரும் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்திருக்கிறார்கள்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் வந்து செல்லும் பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை பெயருக்கு வைத்து அதன் மூலம் கடந்த 2 மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது. பரிசு பொருட்கள் விற்பனை செயயும் ஊழியர்கள் கழிவறையில் பயணிகளிடம் தங்கத்தை வாங்கி மலக்குடல் வழியாக தங்கத்தை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை செல்ல வரும் இணைப்பு விமான பயணிகள் சிலர் தான் இப்படி கடத்தி வரும் தங்கங்களை, பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் மூலம் சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்து சென்று வந்துள்ளார்கள்.

இது தொடர்பாக கடை உரிமையாளரான சபீர் அலி, இலங்கையைச் சேர்ந்த இணைப்பு விமான பயணி ஒருவர் மற்றும் கடை ஊழியர்கள் 7 பேர் ஆகிய 9 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே 267 கிலோ தங்கம் கடத்தல் விவாகரம் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால், சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். குறிப்பாக துபாய் வழியாக வரும் விமானங்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வழக்கமாக ஒரு நாளைக்கு இதுபோல் துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கைக்கு இணைப்பு விமானம் மூலமாக வரும் பயணிகள் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.

முன்னதாக குறைந்தபட்சம் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்து கொண்டு இருந்தனர். ஆனால் தங்கம் கடத்தும் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகு இதுபோன்ற இணைப்பு விமான பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்து விட்டது.

அதேபோல் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், இலங்கை போன்ற நாடுகளுக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்கம் கடத்தும் கடத்தல் ‘குருவிகள்’ என்கிறார்கள்.

இந்த சம்பவத்துக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளாக பயணம் செய்ய துபாய் உள்ளிட்ட அந்த நாடுகளுக்கு டிக்கெட்டு முன்பதிவு செய்திருந்த ஏராளமானவர்கள் தங்களுடைய பயண டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டார்களாம். சென்னையில் இருந்து பயணம் செய்யாமல், வேறு விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்யகிறார்களாம்.