சர்ச்சைகளுக்கு கொஞ்சம் பரபரப்பு இல்லாமல், மீம்ஸ், டிரோல்கள் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் சர்ச்சைச் சாமியார் நித்யானந்தா. கர்நாடகாவில் பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் ஒன்றையும் நடத்தி வந்தார். இவரும் நெருக்கமாக நடிகை ரஞ்சிதாவும் இருந்த வீடியோ வெளியாகி நாடெங்கிலும் பெரும் புயலைக் கிளப்பி அதன்பின் பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைச் சந்தித்து கடந்த 2019-ல் தலைமறைவானார் நித்யானந்தா. இருப்பினும் அவரது பக்தர்கள் உலகம் முழுவதும் அவரை இன்னமும் தொடர்ந்து கொண்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தனது சொற்பொழிவு வீடியோக்களையும் அவ்வப்போது ஆன்மீக நடனம் ஆடியும் மிகவும் பிஸியாக இருக்கும் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டினை தான் உருவாக்கியிருப்பதாகவும், அதில் முற்றிலும் இந்துக்களுக்கான நாடு எனவும் அறிவித்தார். இதற்காக தனி வலைதளம், பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் ஐ.நா.சபையிலும் தனி நாடு அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஐ.நா.சபைக் கூட்டத்தில் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கைலாசா நட்டின் அதிபராக தன்னை அறிவித்துக் கொண்ட நித்யானந்தா இதுவரை அந்த நாடு எங்கிருக்கிறது என்று அறிவிக்கவே இல்லை.
இந்நிலையில் தான் உருவாக்கியுள்ள கைலாசா நாடு எங்கே உள்ளது என வருகிற 21-ம் தேதி குரு பூர்ணிமா நன்னாளில் அறிவிக்க உள்ளதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கைலாசா நாட்டின் குடியுரிமை பெற தனி லிங்க் ஒன்றையும் அதில் இணைத்துள்ளார். நித்தியானந்தா பற்றிய பல கேள்விகளுக்கு வருகிற 21-ம் தேதி பல முடிச்சுகள் அவிழப் போகிறது.