இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்டவை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் அரசு துறையை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதற்கு என ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு மாதமும் செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரம்பத்தில் சலுகைகளை அள்ளி வழங்கிய ஜியோ நிறுவனம் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு ரீசார்ஜ் கட்டணத்தை அதிகமாக உயர்த்தியது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜியோவை அடுத்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் அதன் வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலவு செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு பக்கம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிஎஸ்என்எல் இன்று வெளியிட்டுள்ள புதிய பிளான் குறித்த தகவல் இதோ:
பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச அன்லிமிடெட் அழைப்பு செய்து கொள்ளலாம். மேலும் மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபி பயன்படுத்தலாம் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த திட்டத்தின் சலுகை வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் இல்லை என்பதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.