கலந்தாய்வு முடிந்த பின்னரும் மீண்டும் ஒரு வாய்ப்பு.. கலை அறிவியல் கல்லூரிக்கு மீண்டும் விண்ணப்பம்..!

 

தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் தரப்பட்டு கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மே மாதம் தொடங்கியது என்பதும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் விண்ணப்பித்தனர் என்பதும் தெரிந்தது.

தமிழகத்தில் உள்ள 164 கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் சரி பார்க்கும் பணி தொடங்கி அதன் பிறகு கலந்தாய்வு நடைபெற்றது. ஜூன் 10 முதல் 15 வரை முதல் கட்ட கலந்தாய்வு, அதன் பின்னர் ஜூன் 24 ஆம் தேதி முதல் 29 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்து, தற்போது மாணவர் சேர்க்கைக்கான பணியும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதாவது ஜூலை 3ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை https://tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 8ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே ஒரு பாட பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறொரு பாடப்பிரிவில் மாற விரும்பினால், அந்த மாணவர் கேட்கும் துறையில் காலியிடம் இருந்தால், அவர்களுக்கு பாடப்பிரிவு மாறவும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.