தென்னிந்திய சினிமாவில் அதிரடி குத்துப் பாடல்களாகட்டும், மெலடிப் பாடல்களாகட்டும் தனக்கென ஒரு தனி பாதையைத் தேந்தெடுத்து தனித்துவ இசையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தான் தேவி ஸ்ரீ பிரசாத். ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் விஜய் நடித்த பத்ரி படம் மூலம் இசையமைப்பாளராகக் கால் பதித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான இசையமைப்பளாராக வலம் வருகிறார். புஷ்பா படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றார் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்நிலையில் கடந்த 2010-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மன்மதன் அம்பு. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். சூர்யா ஒரு ஒய்யால என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார். இந்தப் பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களையும் கமல்ஹாசனே எழுதியிருந்தார். அப்படி கமல் வரிகளில் உருவான ஒரு வித்தியாசமான பாடல்தான் நீல வானம் பாடல்.
சாதாரணமாகவே தனது படங்களில் ஏதாவது வித்தியாசம் காட்டும் கமல்ஹாசன் இந்தப் பாடலை ரிவர்ஸ்-ல் எடுத்திருந்தார். காட்சிகள் அனைத்தும் தலைகீழாக நகரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். தனது மனைவி பற்றி கமல் நினைத்துப் பாடும் இந்தப் பாடல் காதல் முதல் கல்யாணம் வரை நடைபெறும் ஊடல்களை ரிவர்ஸ்-ல் வித்தியாசமாக எடுத்திருப்பார். இந்தப் பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது. சினிமாவில் இப்படியும் பாடல்களை எடுக்கலாம் என அதனை படமாக்கி அதில் வெற்றியும் கண்டார் கமல்.
இந்தப் பாடலுக்கான காட்சி பற்றி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் கமல் கூற, தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு கனம் குழம்பிப் போய் உள்ளார். எப்படி ரிவர்ஸ்-ல் வரும் பாடலுக்கு இசையமைப்பது என்று செய்வது அறியாமல் திகைக்க கமலிடம் நான் மற்ற பாடல்களையும், பின்னனி இசையையும் முடித்து விட்டு கடைசியாக இந்தப் பாடலுக்கு இசையமைக்கிறேன் என்று கூறி அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு இந்தப் பாடலுக்காக யோசித்திருக்கிறார்.
அப்படி ஒரு டியூன் உருவான போது அதை கமலிடம் போட்டுக் காட்ட கமல் மெய்சிலிர்த்துப் போய் தேவி ஸ்ரீ பிரசாத்தை தட்டிக் கொடுத்திருக்கிறார். அதன்பின் மற்றவர்களிடம் அவரைப் பாராட்டியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இந்த டியூனை எப்படி உருவாக்கினாய் என்று கேட்க, அவர் எனக்கு நீங்கள் இந்தக் காட்சியைச் சொன்னதும் பயமாக இருந்தது எப்படி உருவாக்கப் போகிறோம் என்று அதன்பின் தைரியமாக உட்கார்ந்து யோசித்து இந்த டியூனை உருவாக்கினேன் என்று கூற, கமல் அந்தப் பயம் எப்போதுமே இருக்கட்டும். என்னையும் இந்தப் பயம்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ந்து போயிருக்கிறார்.