வேலூர்: கடன் வாங்க போறீங்களா.,. சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் லட்கக்கணக்கில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிறுபான்மையின மக்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் முறை குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிப்பில், “தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய 4 கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் நபர்களின் குடும்ப வருமானம், திட்டம் மற்றும் ஆண், பெண் உள்ளிட்டவற்றை பொறுத்து கடன் தொகை குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் இந்த 4 வகையான கடனுதவி தேவைப்பட்டால் அதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிட சான்று, கடன்பெறும் தொழில் குறித்த விவரம் அல்லது திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின மக்கள் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், வேலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயன் அடையலாம்” இவ்வாறு வேலூர் கலெக்டர் சுப்பு லட்சுமி அறிவித்துள்ளார்.
பொதுவாக இந்த கடன்கள் திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 வழங்கப்படும் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படும்.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் தருகிறது அரசு.
சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் தரப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது .
சிறுபான்மையின் மாணவ/மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாகத் திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2 -ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலான கல்வி கடன் பெறலாம்.