நெஞ்சமே நெஞ்சமே.. மாமன்னன் பாட்டுல வர்ற அந்த ஒரு வரிக்கு பின்னாடி இப்படி ஒரு எமோஷனல் காரணமா..

தமிழ் திரைப்படங்களில் தற்போது வெளியாகும் பெரும்பாலான பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஆனால் இதற்கு மத்தியில் குறிஞ்சி பூத்தார் போல எப்போதாவது சில முத்தான பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மனதை கரைய வைக்கும் அளவுக்கு அமைந்திருக்கும்.

அப்படி ஒரு பாடலாக மாமன்னன் படத்தில் இடம் பிடித்திருந்தது தான் ‘நெஞ்சமே நெஞ்சமே’ என்ற பாடல். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார்.

ஆனால், மாமன்னன் திரைப்படம் மூலம் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுடன் முதல் முறையாக இணைந்து பணிபுரிந்திருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். மாமன்னன் படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவான ராசா கண்ணு, நெஞ்சமே நெஞ்சமே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.

அதிலும் சக்தி ஸ்ரீ கோபாலன் மற்றும் விஜய் யேசுதாஸ் ஆகியோர் இணைந்து பாடிய நெஞ்சமே நெஞ்சமே என்ற பாடல் இன்று வரையிலும் இசை பிரியர்களின் ப்ளே லிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறது. மிக அழகான ஒரு மெலடி பாடலாக நம் நெஞ்சை வருடுவது போல வரிகளும், குரல்களும் அமைந்திருக்க, கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த பாடல்களில் ஒன்று என்றும் கூட பலரும் புகழாரம் சூட்டி வந்தனர்.

அது மட்டுமில்லாமல் ஏ. ஆர். ரஹ்மானுடன் முதல் முறையாக பாடலாசிரியர் யுகபாரதி இணைந்து பணிபுரிந்ததும் மாமன்னன் திரைப்படத்தில் தான். மேலும் இந்த பாடலுக்கு பல விருது மேடைகளில் அங்கீகாரம் கிடைத்திருந்த நிலையில், நெஞ்சமே நெஞ்சமே பாடலின் வரிகளுக்காக யுகபாரதியும் சில விருதுகளை வென்றிருந்தார்.

அப்படி இருக்கையில் இந்த பாட்டில் வரும் ஒரு முக்கியமான வரியை பற்றி பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்த கருத்து ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த பாடலில் “இன்று தான் விண்ணிலே பாய்கிறேன்” என்ற வரிகள் வரும். இந்த வரிகளுக்கான காரணத்தை சமீபத்தில் குறிப்பிட்டு பேசி இருந்தார் யுகபாரதி.

ஏ. ஆர். ரஹ்மானுடன் முதல் முறையாக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை தான் அப்படி குறிப்பிட்டு இருந்ததாகவும் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மாரி செல்வராஜூக்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார் யுகபாரதி. பல ஆண்டுகள் பாடல் ஆசிரியராக தடம் பதித்த யுகபாரதி ரஹ்மானுடன் முதல் முறையாக பணிபுரிந்த தருணத்தை பாட்டின் வரிகளோடு குறிப்பிட்ட விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.