கோலியின் முதல் உலக கோப்பை விக்கெட்டிற்கும், ஸ்மிரிதியின் முதல் விக்கெட்டிற்கும் இடையே உள்ள சூப்பரான ஒற்றுமை..

By Ajith V

Published:

இந்திய ஆடவர் கிரிக்கெட்டிற்கு எப்படி விராட் கோலி நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறாரோ அதேபோல இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கும் மிக முக்கியமான வீராங்கனையாக இருந்து வருபவர் தான் ஸ்ம்ரிதி மந்தனா. இவரது தலைமையில் மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இந்த சீசனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் பல போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்து அதற்கு முக்கிய பங்கு வகித்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில் தற்போது தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக நடந்துவரும் ஒரு நாள் தொடரிலும் சில முக்கியமான சாதனைகளை அடித்து நொறுக்கி தன்வசமாக்கி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார் ஸ்ம்ரிதி மந்தனா. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, ஒருநாள் போட்டி உள்ளிட்ட சில தொடர்களில் ஆடவுள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் ஒருநாள் தொடரில் முதலில் மோதி இருந்தது.

இதில் முதல் போட்டியில் இந்திய அணி 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் ஸ்ம்ரிதி மந்தனா 117 ரன்கள் அடித்திருந்தார். அப்போது இந்திய மண்ணில் அதிக ரன் அடித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றிருந்த நிலையில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் மீண்டும் ஒருமுறை சதம் அடித்திருந்தார்.

இதில் 117 ரன்களைக் கடந்து மீண்டும் தனது சாதனையை அடித்து நொறுக்கி இருந்த நிலையில் அதிக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையும் மிதாலி ராஜுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ம்ரிதி மந்தனா. அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக இரண்டு ஒரு நாள் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றிருந்த ஸ்ம்ரிதி மந்தனா, இந்த போட்டியில் பந்து வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.

ஸ்ம்ரிதி மந்தனாவின் ஜெர்சி நம்பர், அவரது பேட்டிங் ஸ்டைல், பந்து வீசும் ஸ்டைல் என அனைத்துமே விராட் கோலியுடன் ஒத்துப் போவதால் பலரும் இவர்கள் இரண்டு பேரையும் குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருவார்கள். அதுமட்டுமில்லாமல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஸ்ம்ரிதி மந்தனா சதமடித்த போது அவர் கொண்டாடிய விதமும், அதே போட்டியில் அவர் பந்து வீசிய விதமும் அப்படியே கோலியை பிரதிபலிப்பது போல் இருந்தது.

இந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் எடுத்த முதல் விக்கெட்டிற்கு பின் உள்ள ஒற்றுமையை பற்றி தற்போது பார்க்கலாம். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் தான் விராட் கோலி தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பை விக்கெட்டை எடுத்திருந்தார். இதே மைதானத்தில் தான் தற்போது ஸ்ம்ரிதி மந்தனா தனது முதல் சர்வதேச விக்கெட்டை கைப்பற்ற, இருவருக்கும் இடையே ஒரு சிறப்பான ஒற்றுமையாக இது பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.