பலாப் பழத்தை வைத்து பூஜை செய்த ஓபிஎஸ்-ஐ எப்படி கட்சிக்குள்ள சேர்க்க முடியும்?… ஈபிஎஸ் காரசார பேட்டி

By John A

Published:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத்தில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 40/40 என்ற வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பினை இழந்தது. சில தொகுதிகளில் சொற்ப ஆயிரங்கள் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதனால் அதிமுகவின் எதிர்காலம் இனி என்ன ஆகுமோ என்று தொண்டர்களும், அரசியல் விமர்சகர்களும் முணுமுணுக்கத் தொடங்கினர். மேலும் சசிகலா அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி என மூன்றாகப் பிரிந்துள்ள அதிமுக ஒன்று சேர்ந்தால் கட்சியை மீண்டும் பலம் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர வாய்ப்புள்ளது என கருத்துக்கள் நிலவி வரும் வேளையில் இன்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்குள் இணைவது பற்றி செய்தியாளர்களுக்கு காரசாரப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்பேட்டியில், “ஓபிஎஸ்-ஐ எப்படி கட்சிக்குள் சேர்க்க முடியும்? இரட்டை இலைக்கு எதிராக பலாப்பழம் சின்னத்தில் நின்ற அவரை ஒரு தொண்டன் கூட மதிக்க மாட்டான். அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வியர்வையாகச்சிந்தி வெற்றிக்காக உழைக்கின்றனர். ஆனால் அவர் பலாபழத்தை வைத்து பூஜை செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவர் ஒருமுறை இதேபோன்ற தவறைச் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாரயச் சம்பவம் – தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்

அதிமுக ஆட்சியில் இருந்த போது நான் முதலமைச்சாராக இருந்த சமயத்தில் கவர்னர் உத்தரவுப்படி சட்டசபைத் தலைவர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னதால் அப்போது வாக்கெடுப்பு நடந்த போது ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். இவர் எப்போது கட்சிக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார். ஓபிஎஸ் எப்போதுமே அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததாக சரித்திரமே கிடையாது.” இவ்வாறு ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சசிகலாவும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளதாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிமுக ஒன்றிணைவதில் இந்த நால்வருமே வெவ்வேறு நிலைப்பாட்டில் இருந்து வருவதால் பிரிந்துள்ள கட்சி மீண்டும் ஒன்று சேர்ந்து விஸ்வரூப பலம் பெறுமா என்று தொண்டர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.