ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த சாமி படம்.. மாசாணி அம்மனாக மிரட்டப் போகும் திரிஷா?

நயன்தாரா நடிப்பில் கடந்த 2020-ல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தீபாவளி ரிலீஸாக வெளிவந்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்தப் படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்மிருதி வெங்கட், மௌலி, அபிநயா ஆகியோர் நடித்திருந்தனர். படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஆர்.ஜே.பாலாஜி தனது ஸ்டைலில் காமெடியாக பக்திக் கதையைச் சொல்லியிருந்தார்.

நயன்தாரா ஏற்கனவே சீதையாக ராமராஜ்ஜியம் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார். இதனால் அம்மன் வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என மூக்குத்தி அம்மனில் நடிக்க வைத்தார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும் ஆர்.ஜே.பாலாஜி கடந்த 2022-ல் சத்யராஜ், ஊர்வசியுடன் சேர்ந்து நடித்து வீட்ல விஷேசம் படத்தினை இயக்கினார். இந்தப் படமும் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி மீண்டும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் போல அடுத்த பக்திப் படத்தினை இயக்க உள்ளார். கடந்த முறை மூக்குத்தி அம்மனாக ஜொலித்த நயன்தாராவுக்குப் பதிலாக இந்த முறை அவர் அம்மனாக நடிக்க தேர்வு செய்தது திரிஷாவை. அரண்மனை-2 படத்தில் பேயாக நடித்துப் பயமுறுத்திய திரிஷா இந்த முறை அம்மனாக அவதாரம் எடுக்க உள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாரயச் சம்பவம் – தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்

இந்த முறை ஆர்.ஜே.பாலாஜி தேர்வு செய்துள்ள தலைப்பு மாசாணி அம்மன். ஏற்கனவே தமிழகத்தின் பல பிரபல அம்மன் கோவில்களான கோட்டை மாரியம்மன், பன்னாரி அம்மன், பாளையத்து அம்மன், ஆதிபராசக்தி, அன்னை வேளாங்கண்ணி போன்ற பல இடங்களில் உள்ள அம்மனின் பெயர்களை படத்தின் டைட்டிலில் வைத்தது போன்று பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலான மாசாணி அம்மன் கோவிலின் பெயரையே தலைப்பாக வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது நயன்தாரா, திரிஷா ஆகியோர் மிகவும் நல்ல கதாபாத்திரங்களையும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களையும் தேர்வு செய்து நடித்து வரும் வேளையில் இதுபோன்ற படங்கள் அவர்களுக்கு இன்னும் பெண்கள் மத்தியில் நல்லபெயரைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமேயில்லை. மீனா, ரம்யா கிருஷ்ணன், கே.ஆர்.விஜயா போன்றோர் இதுபோன்ற அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துப் பெரும்புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.