பெங்களூர் தம்பதி அமேசானில் ஆர்டர் செய்த பார்சலை திறந்தால்.. எட்டிப்பார்த்த நாகப்பாம்பு

By Keerthana

Published:

பெங்களூர்: பெங்களூர் தம்பதி அமேசானில் ஆர்டர் செய்த மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் வந்த பார்சலுக்குள் நல்ல பாம்பு இருந்தது. இந்த வீடியோ காண்போரை நடுங்க செய்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் சார்ஜாபூரில் வசிக்கும் தம்பதி மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் பேக்கேஜைப் வாங்கி பார்சலை திறந்ததும் நாகப்பாம்பு ஒன்று நேருக்கு நேர் அவர்கள் கண் முன்னே வந்து நின்றுள்ளது. இதை பார்த்து திடுக்கிட்ட தம்பதி உடனே அதனை வீடியோ எடுத்து வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்துபற்றி பெங்களூர் தம்பதி கூறுகையில், “நாங்கள் 2 நாளைக்கு முன்பு ஆன்லைனில் மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை அமேசானில் ஆர்டர் செய்தோம். நாங்கள் வாங்கிய பேக்கினை திறக்க முயன்ற போது உயிருடன் நாகப் பாம்பு இருந்தது. இதையடுத்து அந்த பேக்கேஜ்ஜை நாங்கள் உடனே டெலிவரி பார்ட்னரிடம் கொடுத்துவிட்டோம். நடந்த முழு சம்பவத்தையும் கேமராவில் வீடியோ எடுத்து வைத்துள்ளோம்.

கொடிய விஷம் உள்ள நாகப்பாம்பை அமோசான் பேக்கில் வாங்கி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது நடுக்கமாக உள்ளது. இது அமேசானின் மோசமான அலட்சியம். இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு விஷயத்தில் நடந்த பெரிய தவறு தான் காரணம். இதற்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

அந்த தம்பதி வெளியிட்ட வீடியோவில் பாதி திறந்த அமேசான் பாக்ஸ் அட்டை பெட்டியில் சிக்கிய சிறிய நாகப்பாம்பு ஒன்று அசைந்து அங்கிருந்து வெளியே தப்பிக்க முயற்சிக்கிறது. இதை பார்த்த அமேசான் வாடிக்கையாளர் ஒருவர், “அந்த தம்பதி முழுப் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

ஆனால் நடந்த சம்பவத்தற்கான இழப்பீடு தரப்படவில்லை.. அதேபோல் அதிகாரப்பூர்வ மன்னிப்பு எதுவுமே அமேசான் இதுவரை கேட்டவில்லை. அவர்களின் வழக்கமான சம்பிரதாய வார்த்தைகளான உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று மட்டும் கூறி முடிக்ககூடாது. இந்த சம்பவத்தை எல்லா வகையிலும் அமேசான் வாடிக்கையாளர்களாகிய எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு மோசமான பாதுகாப்பு மீறல் என்றார். இதனிடையே குறிப்பிட்ட நாகப்பாம்பு பிடிக்கப்பட்டு , மக்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விடப்பட்டது.

அமேசான் நிறுவனத்தின் பதில் என்ன: அமேசான் இந்தியா செய்தித் தொடர்பாளர் இமெயிலில் அனுப்பிய பதிலில் “எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்களின் பாதுகாப்புக்கே நாங்கள் முதல் முன்னுரிமை தந்து வருகிறோம்.. வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நம்பகமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனைத்து புகார்களையும் நாங்கள் தீவிரமாக எடுத்து, தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது. அமோசான் பாக்ஸை திறந்தபோது சரியான நேரத்தில் கையை எடுத்ததால் பெங்களூர் தம்பதி உயிர் தப்பி உள்ளனர்.