ஒரே ஒரு விளம்பரம், ஒரே ஒரு டயலாக் மூலம் பிரபலமாகி இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் தான் இமான் அண்ணாச்சி. தமிழ் சினிமாவில் வட்டார வழக்கு மொழியில் பேசி நடிக்கும் நடிகர்கள் மிகச் சிலரே. அந்த சில பேரில் நெல்லைத் தமிழில் பேசி ரசிகர்களிடம் தனது வட்டார வழக்கு மொழியாலே பிரபலமடைந்தவர் இமான் அண்ணாச்சி.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்னும் சிற்றூரில் பிறந்த இமான் அண்ணாச்சி சிறு வயதிலிருந்தே சினிமா கனவுகளுடன் வளர்ந்திருக்கிறார். இவரின் ஆர்வத்தைப் பார்த்த ஒருவர் சென்னை செல்லுமாறு அறிவுறுத்த சென்னை வந்து முதலில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே நான் திரைப்படத்துறைக்குத் தான் வந்துள்ளேன் என்பதை அறிந்த அக்கடையின் ஓனர் அவரை சினிமா வாய்ப்புத் தேடுமாறு அனுப்பிவிட்டார். அதன்பின் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் பணிபுரிந்திருக்கிறார். அங்கேதான் அவருக்கும் மூன்று வேளை உணவும், தங்க இடமும் கிடைத்தது.
அதன்பின் காய்கறி வியாபாரம் பார்க்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் காய்கறி வியாபாரத்திலேயே அவரது வாழ்க்கை கழிந்தது. இதனையடுத்து முதன்முதலாக விஜய் டிவியில் ஒரு சிறிய ஷோவில் முதன் முதலாகத் தலை காட்டினார். அதன்பின் கடந்த 2006-ல் வெளியான சென்னைக் காதல் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்தார். தொடர்ந்து டி.வி. ஷோக்களில் தலைகாட்டத் தொடங்கினார். இவரது நெல்லைத் தமிழில் தொகுத்து வழங்கும் பாணி அவருக்கு வெற்றியைக் கொடுத்தது.
தொடர்ந்து ஆதித்யா டிவியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார். அதன்பின் டேபிள் மேட் விளம்பரம் இவரை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. அதன்பின் சன்டிவியில் ஒளிபரப்பான குட்டி சுட்டீஸ் மற்றும் ஸ்டார் விஜய் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிகப் பிரபலம் ஆனார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் வர தனது லட்சியத்தினை அடைந்தார் இமான் அண்ணாச்சி. தற்போது காமெடி, குணச்சித்திரம், டிவி ஷோக்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த தூத்துக்குடி மண்ணின் மைந்தன்.