சென்னை: தமிழகத்தில் 1997ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மினி பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மினி பஸ்கள் அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகராட்சியுடன் 2011-ம் ஆண்டு இணைந்த பகுதிகளுக்குத்தான் மினி பஸ் சேவைகள் கிடைக்கும்.
தமிழகத்தில் 1997ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மினி பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024 என்ற திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. அதற்கான வரைவு அறிக்கையை தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அரசு வெளியிட்டுள்ள தகவல்களை பார்ப்போம்.
“சாலை போக்குவரத்தில் மாற்றியமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, புதிய மினி பஸ் திட்டம் வரைவு அறிக்கை -2024 தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயக்குவதற்கு அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இந்த மினி பஸ் சேவை வழித்தடம் வழங்கப்படாது.
அதே வேளையில் சென்னை மாநகராட்சியுடன் 2011-ம் ஆண்டு இணைந்த திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை அளிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் எந்ததெந்த வழித்தடங்களில் மினி பஸ்களுக்கான அனுமதியை வழங்கலாம் என்பதனை போக்குவரத்து துறையின் ஆர்.டி.ஓ.க்கள் முடிவு செய்வார்கள். மேலும் ஒரு வழித்தடத்தில் எத்தனை மினி பஸ்களுக்கு அனுமதி தரலாம் என்பதனையும் அவர்களே முடிவு எடுப்பார்கள். இந்த மினி பஸ்கள் அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க அனுமதி அளிக்கப்படும்.
அதில் 18 கிலோ மீட்டர் சேவை இல்லாத வழித்தடமும், 8 கிலோ மீட்டர் சேவையுள்ள வழித்தடத்திலும் இயக்க அனுமதி வழங்கப்படும். அதாவது 70-க்கு 30 என்ற வழித்தட முறை பின்பற்றப்படும். ஒரு மினி பஸ்சில், டிரைவர் மற்றும் கண்டக்டர் அல்லாமல் அதிகபட்சமாக 25 பேர் வரை இருக்கை வசதி செய்யலாம். அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். இந்த மினி பஸ்கள் சேவைகள் மூலம் இனி 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கும் பஸ் சேவை கிடைக்கும்” இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த மினி பஸ் அனுமதி தொடர்பான வரைவு அறிக்கை குறித்து அடுத்த 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அடுத்த மாதம் 22-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள (கோட்டை ) 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.